பாகிஸ்தானில் கடந்த ஆண்டு மே மாதம் 13-ந் தேதி ஷியா இஸ்மாயிலி பிரிவினர் பயணம் செய்த பஸ்சின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் அந்த இனத்தவர் 47 பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
இதேபோன்று மனித உரிமை ஆர்வலர் சபீன் முகமது என்பவர், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந் தேதி காரில் பயணம் செய்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார்.
இவ்விரு வழக்குகளிலும் தாஹிர் மின்ஹாஸ், சாத் அஜிஸ், அசாத்துர் ரகுமான், முகமது அசார் இஷ்ராத், ஹபீஸ் நாசர் அகமது ஆகிய 5 பயங்கரவாதிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவங்களில் மூளையாக இருந்து செயல்படுத்தியவர், தாஹிர் மின்ஹாஸ் என கூறப்படுகிறது.
இவர்கள் மீதான வழக்கு விசாரணையை ராணுவ கோர்ட்டு நடத்தி வந்தது. விசாரணை முடிவில் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கருதி, அவர்களுக்கு மரண தண்டனை (தூக்கு தண்டனை) விதித்து தீர்ப்பு அளித்தது.
ஆனால் தண்டனையை எதிர்த்து 5 பேரும் தங்கள் வக்கீல் ஹஷ்மத் அலி ஹபிப் மூலம் ராணுவ அப்பீல் நீதிமன்றத்தில் மேல்-முறையீடு செய்தனர். இந்த மேல்-முறையீட்டை விசாரித்த அப்பீல் நீதிமன்றம், அவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை (தூக்கு தண்டனை) உறுதி செய்து உத்தரவிட்டது.இந்த தீர்ப்பை எதிர்த்து ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்போவதாக தண்டிக்கப்பட்டவர்களின் வக்கீல் தெரிவித்துள்ளார்.