ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரினால் நபர் ஒருவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸ் ஆணைக்குழு அவதானம் செலுத்தியுள்ளது.
அதன்படி எதிர்வரும் வியாழக்கிமை இதுகுறித்து கலந்துரையாட இருப்பதாக பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாஸ குரே கூறினார்.
ஹம்பாந்தோட்டை இந்திய துணைத் தூதுவராலயத்திற்கு அருகில் நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர் குண்டு தாக்குதல் மற்றும் தண்ணீர் பிரயோகம் மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது சிலர் கைது செய்யப்பட்டதுடன், கைது செய்யப்பட்ட ஒருவர் மீது பொலிஸார் தாக்குதல் நடத்தும் வீடியோ காட்சி ஒன்று ஊடகங்களில் வௌியாகியிருந்தது.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை பொலிஸாரினால் நடத்தப்படும் தாக்குதல் சம்பவங்கள் அல்லது பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்ற எந்தவொரு முறைகேடுகள் சம்பந்தமாகவும் தமக்கு அறிவிக்க முடியும் என்று பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.
இவ்வாறான முறைப்பாடுகளை எழுத்து மூலம் அறிவிக்க முடியும் என்பதுடன், 071 036 1010 என்ற தொலைபேசி ஊடாகவும் அறிவிக்க முடியும் என்று பொலிஸ் ஆணைக்குழு கூறியுள்ளது.
இது தவிர மாவட்ட செயலக அலுவலகங்களில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் ஆணைக்குழுவின் அலுவலகத்திலும் முறைப்பாடுகளை அறிவிக்க முடியும்.