தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டிக்கான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி வீரர்களின் அறிமுகம் கண்கவர் அணிவகுப்புடன் நேற்று நடந்தது. முன்னாள் கேப்டன் அசாருதீன், நடிகை சமந்தா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஐ.பி.எல். பாணியில் புதுமையான தமிழ்நாடு பிரிமீயர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுகிறது. நாளை மறுதினம் (புதன்கிழமை) தொடங்கி செப்டம்பர் 18-ந்தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் 8 அணிகள் களம் இறங்குகின்றன. சென்னை, திண்டுக்கல் நத்தம், நெல்லை ஆகிய இடங்களில் மொத்தம் 31 ஆட்டங்கள் நடக்கின்றன.
சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசும், தூத்துக்குடி பேட்ரியாட்சும் மோதுகின்றன.
இந்த நிலையில் போட்டியில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் அறிமுக விழா சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. அணிக்குரிய லோகோ (சின்னம்) அறிமுகத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. அதைத் தொடர்ந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன், கிரிக்கெட் வீரர்கள் ஜாகீர்கான், ஆஷிஷ் நெஹரா, இர்பான் பதான் ஆகியோர் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சீருடையை அறிமுகப்படுத்தினார்கள். அவர்களிடம் அணியின் சீருடையை நடிகை சமந்தா வழங்கினார்.