இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதம்

25217 0

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச சமவாயத்தினை நடைமுறைப்படுத்துவதற்கான சட்டமூலம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதிக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

குறித்த சமவாயத்தை அங்கீகரிப்பதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டபோதும், பின்னர் அது கைவிடப்பட்டது.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தமது அவதானிப்புக்களை, ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளது.

பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுதல் பற்றிய இலங்கையின் நீண்டகால வரலாற்றில் குற்றங்களுக்கான தண்டனையிலிருந்து விலக்கீடு பெறுவதை தடுக்கும் வகையில் இந்தச் சட்டமூலம் ஒரு முற்போக்கானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமாகும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், அவர்களைப் பற்றிய உண்மைகளை அறிந்து கொள்வதையும், தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதையும் இந்தச் சட்டமூலம் சாத்தியமாக்குகின்றதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளது.

இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாப்பிற்கான தனிச் சிறப்பை வழங்கும் இந்தச் சட்டமூலத்தை ஏற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் தமது ஆதரவை தெரிவிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

Leave a comment