கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ கட்ரஸ் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த போர்களில் சிக்கி 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் பலியானதாக ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ கட்ரஸ் கூறியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப்போர் மற்றும் தீவிரவாத தாக்குதல்களில் சிக்கி பலியான சிறார்கள் குறித்த அறிக்கையை ஐ.நா தலைவர் அண்டோனியா கட்ரஸ் நேற்று வெளியிட்டார். அதில், கடந்த ஆண்டு மட்டுமே எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட சிறார்கள் இது போன்ற சண்டைகளில் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக ஆப்கானிஸ்தானில் மட்டும் 3,512 சிறார்கள் சென்ற ஆண்டு பலியாகியுள்ளனர். இது மொத்த சிறார் பலி எண்ணிக்கையில் 40 சதவீதத்துக்கும் அதிகமாகும். ஆப்கானிஸ்தானின் சரித்திரத்திலேயே இதுதான் மிக அதிகமான சிறார் பலி எண்ணிக்கை என்பது குறிப்பிடத்தக்கது.
அது போலவே, அப்பாவிச் சிறார்களை ஆயுதம் ஏந்தச் செய்து சண்டையில் ஈடுபடுத்துவதும் நடைபெற்று வருவது வேதனைக்குரியது என கட்ரஸ் தெரிவித்தார். சோமாலியா மற்றும் சிரியாவில் சிறார்களை ஆயுதமேந்தச் செய்யும் நடவடிக்கை முந்தைய 2015-ஆம் ஆண்டைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்திருப்பதாக அவர் கூறினார்.
தெற்கு சூடானில் சென்ற ஆண்டு நடைபெற்ற பல்வேறு வன்முறை சம்பவங்களில் 1,022 சிறார்கள் பாதிக்கப்பட்டனர். அங்கு ஆயுதமேந்திய சண்டைக் குழுக்கள் மட்டுமல்லாமல், அரசே சிறார்களை ராணுவத்தில் ஈடுபடுத்தியது வேதனை அளிப்பதாக கட்ரஸ் பேசினார்.