வடக்கு மாகாகணத்தில் இருந்து சகல நிதி நிறுவனங்கள், லீசிங் கம்பனிகளின் செயற்பாடுகளை நிறுத்துமாறு பெண்கள் அமைப்புக்கள் இன்று மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இன்று யாழ்ப்பாணத்தில் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழில் அமைப்புக்களின் சங்கப் பிரதிநிதிகள், பெண்களின் அமைப்புக்கள், ஓய்வுபெற்ற வங்கி உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் உட்பட்ட பொது அமைப்புக்களை சந்தித்த போது யாழ்ப்பாண மாவட்ட பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட பின்னர் மக்கள் விகிதாசார தொகைக்கு மேலாக, கொழும்பு மாவட்டத்திற்கு அடுத்ததாக கூடுதலான தனியார் வங்கிகள், லீசிங் கம்பனிகள் இயங்குகின்றன.
பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட கும்பத்தினர் கடன்களை பெற்ற பின்பு வீடுகளுக்கு சென்று, முறையற்ற விதத்தில் அணுகி கடன் மீள் வசூலிப்பிற்கு செல்லும் போது பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொள்ளும் சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
இதன் காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தனியார் நிறுவனங்களில் கடன் எடுத்த பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைமை ஏற்படுவதாக பெண்கள் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
எனவே போருக்கு பின்னர் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட லீசிங் கம்பனிகள் மற்றும் நிதி நிறுவனங்களை முடக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.
அது மாத்திரமின்றி கடனாக கொடுக்கும் பணத்திற்கு பல மடங்கு தொகையை வட்டியாக அறவிடுகின்றார்கள் என்றும் பெண்கள் அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் அவ்வாறாக நேர்மையற்ற முறையில் இயங்குகின்ற வங்கிகளின் பெயர் விபரங்களை மத்திய ஆளுநர் கேட்ட போது அவ்விபரங்களையும் பெண்கள் அமைப்பினர் ஆளுநரிற்கு தெரிவித்துள்ளனர்.