ஹம்பாந்தோட்டை ஊடான சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு அச்சப்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியா பலவந்தமாக பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றது. ஆகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்தள விமான நிலையத்தை பாதுகாக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபகஷ தெரிவித்தார்.
பொறுப்புணர்வுடன் செயற்பட்டு மத்தள விமான நிலையத்தை இந்தியாவிற்கு கொடுக்கும் திட்டத்தை அரசாங்கம் நிறுத்த வேண்டும். அவ்வாறு அல்லாது தேசிய வளங்களை தொடர்ந்தும் அந்நிய நாடுகளுக்கு வழங்கி வந்தால் கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் தெளிவுப்படுத்துகையில் ,
தேசிய வளங்களை பாதுகாக்க வேண்டிய நிலையில் அவற்றை அந்நிய நாடுகளுக்கு நல்லாட்சி அரசாங்கம் விற்பணை செய்து வருகின்றது.
இலங்கையின் தெற்கு பகுதி என்பது பூகோள ரீதியாக பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ளது. குறிப்பாக ஹம்பாந்தோட்டை நகரம் துறைமுகம் மறறும் விமான நிலைய சிறப்புகளை கொண்டுள்ளதால் பல நாடுகளும் அந்த பகுதியை குறி வைத்து திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
கபடத்தனமான நோக்கங்களுடன் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்துடன் அந்நிய நாடுகள் பல செயற்பட்டு வருகின்றன. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி காலத்தில் சர்வதேச நாடுகளுடன் செயற்படும் போது தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு மக்களின் எதிர்கால நலன்களை கருத்தில் கொண்டே தீர்மானங்களை எடுத்தோம். ஆனால் தற்போதைய நல்லாட்சி முற்றிலும் நாட்டிற்கு எதிரான செயற்பாடுகளிலேயே உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.