தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் உறுதியும், இறுதியுமான நடவடிக்கை அவசியம்- அனந்தி சசிதரன்!

4933 0

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தினை கைவிட்டு இலங்கை அரசாங்கம் இனியாவது உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை எடுப்பது அவசியமாகும். தமிழ் அரசியல் கைதிகள் விடயம் குறித்து வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வவுனியா நீதிமன்றத்திலேயே குறிப்பாக தமிழ் பகுதிகளில் தமது வழக்கு நடவடிக்கைகள் விசாரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் மூவர் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அனுராதபுரம் சிறைச்சாலையில் உள்ள மரண தண்டனைக் கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகள் தங்கவைக்கப்பட்டுள்ளமை அவர்களது பாதுகாப்பு குறித்த ஐயப்பாட்டினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த கால இனப்படுகொலை வரலாற்றின் அனுபவத்தின் வழியே இவ் ஐயம் ஏற்படுவது தவிர்க்கவியலாததாகின்றது. 1983 ஜுலை 23 இனப்படுகொலை நடவடிக்கையின் போது வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்தேறிய காட்டுமிராண்டித்தனம் நேற்று நடந்தது போன்று எமது நெஞ்சமெங்கும் ஆழமாக வியாபித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் துணையோடு கைது செய்யப்பட்டு அதிகார அத்துமீறலின் கீழான அச்சுறுத்தல் நிலையில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலங்களை மட்டுமே அடிப்படை ஆதார-மாகக்கொண்டு நீதிக்குப் புறம்பாக சிறையிலடைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்காது பொய் வாக்குறுதிகளை வழங்கி காலம் கடத்தும் தந்திரத்தனமான போக்கை இன்றைய நல்லாட்சி அரசும் கடைப்பிடித்து வருவகின்றது.

கடந்த காலங்களில் தென்னிலங்கையில் ஆயுதப் புரட்சியில் ஈடுபட்டிருந்த ஜேவிபி யினருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியுமென்றால் வெறுமனே சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டு வற்புறுத்தலின் பெயரில் பெறப்பட்ட குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தின் அடிப்படையில் சிறைத்தண்டனை அனுபவித்துவரும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்க முடியாது?

இவ்வாறான போக்கினை இனியாவது கைவிட்டு நீதிக்குப் புறம்பான வகையில் தடுத்து வகை;கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் அனைவரையும் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுவித்து அவர்களது வாழ்வில் விடியலை ஏற்படுத்த உறுதியும், இறுதியுமான நடவடிக்கையினை இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் எடுக்க வேண்டுமென வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment