உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாடுபூராகவும் உள்ள தேர்தல் தொகுதிகளில் 75 சதவீதமான தொகுதிகளை ஐக்கிய தேசிய முன்னணி கைப்பற்றும் என்பதனை தமதுகட்சி கணக்கிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாஷிம் தெரிவித்தார்.
அத்துடன் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இறுதி தீர்மானம் எடுப்பதற்கு
பிரதமர் தலைமையில் வேட்பு மனு குழுவொன்று நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் கபீர் ஹாஷிம் மேலும் குறிப்பிடுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தற்போது நாம் தயாராகி வருகின்றோம். இதன்படி மாவட்ட அடிப்படையில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கு மாவட்டங்கள் வாயிலாக சிறிகொத்தா வேட்பாளர் தெரிவுக்குழு பயணித்த வண்ணம் உள்ளது. இந்த வாரம் அநுராதபுரம், பொலனறுவை மாவட்டங்களுக்கு தெரிவுக்குழு பயணிக்கவுள்ளது. அதேபோன்று ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் பயணித்து வேட்பாளர்களை தெரிவு செய்ய திட்டமிட்டுள்ளோம்.
ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர்கள் தெரிவில் கிராமத்தில் உள்ள பிரபலங்களை களமிறக்க திட்டமிட்டுள்ளோம். இதன்படி சிறிகொத்தா தெரிவுக் குழுவினால் தயார் செய்யும் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்கான இறுதி தீர்மானம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நியமிக்கும் குழுவினால் எடுக்கப்படும். விரைவில் குறித்த குழு நியமனம் செய்யப்படும்.
இந்நிலையில் தற்போது கட்சியினால் கணக்கீடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கின்படி நாடுபூராகவும் உள்ள தேர்தல் தொகுதிகளில் 75 சதவீதமான தொகுதிகளை ஐக்கிய தேசிய முன்னணி கைப்பற்றும். அத்துடன் தற்போது இந்த ஆட்சியின் மீது ஐக்கிய தேசியக் கட்சியினரே நம்பிக்கை இழந்தது போல் செயற்படுகின்றனர். இரு வருடங்களில் ஆட்சி கவிழ்ந்து விடுமோ என்று அஞ்சுகின்றனர்.
எனினும் நான் ஒன்றை கூற விரும்புகின்றேன். நாம் இரு வருடங்களுக்கு ஆட்சி செய்ய வரவில்லை. இம்முறை அது நடக்காது. 2020 ஆம் ஆண்டு ஆட்சி முடித்துக்கொண்டு விடாமல் 2025 வரையும் ஆட்சியை கொண்டு செல்வோம். அதுமட்டுமல்லாமல் 2025 ஆம் ஆண்டுக்கு அப்பாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை கொண்டு செல்வோம்.
இவ்வருடத்தில் விசேட போயா தினமொன்றை உருவாக்குவதன் ஊடாக மாத்திரமே கூட்டு எதிர்க்கட்சிக்கு ஆட்சியை கவிழ்க்க முடியும். ஏனெனில் இவ்வருடத்தில் அவர்கள் கூறிய போயா தினம் முடிவடைந்து விட்டது என்றார்.