புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளி ஒருவரின் ஹோட்டலுக்குள் அத்துமீறி சிவில் உடையில் சென்ற ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் அங்கு பணி புரிந்துகொண்டிருந்த வயோதிபரை தாக்கியதோடு ஹோட்டல் உரிமையாளரையும் அச்சுறுத்தியுள்ளனர். இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளான வயோதிபர் சிகிச்சைகளுக்காக சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் சாவகச்சேரியில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;
கடந்த மூன்றாம் திகதி குறித்த மது விற்பனை நிலையம் பூட்டப்பட்டு அருகில் இருந்த ஹோட்டல் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இதன் போது அங்கு சிவில் உடையில் வந்த 5 பொலிசார் ஹோட்டலில் வேலை செய்து கொண்டிருந்த 70 வயதுடைய வயோதிபர் ஒருவரிடம் சாராயம் தருமாறு கேட்டுள்ளனர். எனினும் அன்றைய தினம் சாராயம் விற்பதில்லை என குறித்த வயதானவர் சிவில் உடையில் வந்த பொலிசாரிடம் கூறியுள்ளார்.
இதனை அடுத்து சாராயம் விற்கும் இடம் எது என தேடி உள்ளே சென்றுள்ளார்கள். உள்ளே செல்லும் போது எந்தவிதமான சட்ட விதிமுறைகளும் பின்பற்றப்படாது உள்ளே சென்றவர்கள் மீண்டும் அந்த வயதானவரை அழைத்து எங்கு சாராயம் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது என கேட்டுள்ளனர். எனினும் குறித்த தினம் மது விற்பனை நிலையம் பூட்டப்பட்டுள்ளது என்றும் மறுதினமே திறக்கப்படும் தற்போது திறக்கப்பட்டுள்ளது ஹோட்டல் மட்டுமே என பதில் அளித்துள்ளார்.
இதன் போது திடீரென அவர்களில் இருவர் குறித்த வயதான வரை தாக்கியுள்ளனர். பின்னர் ஹோட்டலின் களஞ்சிய அறையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த சாராயத்தையும் ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு குறித்த வயதானவரையும் அழைத்துக்கொண்டு சாவகச்சேரி பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்கள்.
எனினும் இவ்வாறு செய்வதற்கு உங்களுக்கு அனுமதி இல்லை என ஹோட்டலில் நின்றவர்களால் கூறப்பட்டுள்ளது. எனினும் தாம் விசேட பொலிஸ் குழு தமக்கு அதிகாரம் உண்டு என கூறிய பொலிசார் குறித்த வயதானவரை சிறையில் அடைத்துள்ளனர். எனினும் குறித்த ஹோட்டலின் உரிமையாளர் சட்டத்தரணி ஒருவரோடு சென்று பொலிஸ் பிணையில் குறித்த வயதானவரை விடுதலை செய்துள்ளனர்.
இதன் பின்னர் நேற்று முன்தினம் குறித்த சம்பவம் தொடர்பில் ஹோட்டலின் உரிமையாளர் யாழ்.பிராந்திய மனிதவுரிமை ஆணைக்குழுவின் காரியாலயத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த முறைப்பாட்டினை முன்னாள் போராளியான சு.நிதிகேசன் பதிவு செய்துள்ளார். மேலும் முன்னாள் போராளி என்பதனை காரணம் காட்டியே தான் இவ்வாறு அச்சுறுத்தப்படுவதாகவும், இதற்கு முன்னரும் இரு தடவைகள் பொலிசாரால் அச்சுறுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவத்தில் பொலிசாரால் தாக்கப்பட்ட முதியவர் நாவற்குழி பகுதியை சேர்ந்த ஆர்.சண்முகநாதன் [வயது 70] என்பவர் பிடரியில் உள்ள நரம்பு ஒன்று வீக்கமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவங்களை அடுத்து நேற்றைய தினம் குறித்த சம்பவம் தொடர்பில் மனிதவுரிமை ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட முறைப்பாட்டை வாபஸ் பெறுமாறு பொலிசார் கோரி வருகின்றனர் என்றும் ஹோட்டல் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.