அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதத்தை முன்னெடுத்துள்ள தமிழ் அரசியல் கைதிகள் மூவரின் நிலை மோசமடைந்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட பொது அமைப்புக்கள் இணைந்து தொடர்ச்சியான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானம் எடுத்துள்ளன.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் ஏற்பாட்டில் அவரது அலுவலகத்தில் வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களுடனான சந்திப்பு ஒன்று இன்று மாலை இடம்பெற்றது. இதன் போதே குறித்த விடயம் தொடர்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரசியல் கைதிகள் நீண்டகாலமாக விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீதான விசாரணைகளையும் தென்பகுதி நீதிமன்றங்களுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விடுதலையை வலியுறுத்தியும் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் அதற்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் கைதிகளின் விடுதலையை தொடர்ச்சியாக வலியுறுத்தும் வகையிலும் பொது அமைப்பு ஒன்றினை ஸ்தாபித்து அதனூடாக அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புக்கள், சட்டத்தரணிகள், மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், பொது அமைப்புக்கள் எனப் பல்வேறு தரப்புக்களையும் உள்வாங்கி தொடர்ச்சியான ஜனநாயக போராட்டங்களை நடத்துவதற்கு தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. அதன்படி முதலாவது போராட்டம் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும், வவுனியா மேல் நீதிமன்றில் இருந்து மூன்று அரசியல் கைதிகளின் வழக்கு விசாரணைகளை அனுராதபுரம் நீதிமன்றுக்கு மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்வரும் திங்கள் கிழமை காலை 10 மணிக்கு வவுனியா பேரூந்து நிலையம் முன்பாக மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் வவுனியா மாவட்ட வர்த்தக சங்க பிரதிநிதிகள், தனியார் பேரூந்து உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பு பிரதிநிதிகள், அக்கினிச் சிறகுகள் அமைப்பு பிரதிநிதிகள், புதிய மாக்சிச லெனின் கட்சி பிரதிநிதிகள், வெகுஜன மக்கள் அமைப்பு பிரதிநிதிகள், சிகை அலங்கரிப்பு சங்க பிரதிநிதிகள், தேக்கவத்தை பெண்கள் அமைப்பு, தமிழ் மாமன்ற பிரதிநிதிகள், கலைஞர்கள், ஊடகவியலாளர்கள் எனப்பல்வேறு தரப்புக்களும் கலந்து கொண்டனர்.