தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும் – சம்பந்தன்

382 0

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணும் வகையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படுவது அவசியமாகும்.

இந்தப் பணிகளில் தவறிழைப்பின் வன்முறையின் மீள் உருவாக்குத்துக்கு அது வழிவக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான அமைச்சர் மார்க் பீல்டை கொழும்பில் இன்று சந்தித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

இந்த நாட்டின் பிரஜைகள் என்ற தங்களது இறையாண்மையின் அடிப்படையில் சமூகஇ கலாசாரஇ பொருளாதார மற்றும் அரசியல் விடயங்கள் தொடர்பில் அதிகாரங்களை பயன்படுத்தக் கூடியவாறான ஒரு அதிகாரப் பகிர்வு ஒழுங்கே மக்களால் வலியுறுத்தப்படுகிறது.

இத்தகைய அதிகாரங்கள் எந்த வகையிலும் மீளப்பெறப்படலாகாது என சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையாக தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

இதனடிப்படையில் இந்த மாகாணங்கள் இணைந்த ஒருமாகாணமாக இருக்க வேண்டும்.

அரசியலமைப்பில் பிரிவினையை தடுக்கும் உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளமையினால் இவ்விருமாகாணங்களும் இணைவதனை பெரும்பான்மை சிங்கள மக்கள் அச்சத்துடன் நோக்கவேண்டிய அவசியமில்லை என சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்தகால வன்முறைகளின் விளைவாக 50வீதமான  இலங்கை தமிழ் மக்கள் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்.

இந்த நிலையில் தேசிய பிரச்சினைக்கு சரியான தீர்வினை காணத்தவறும்பட்சத்தில் மக்கள் நாட்டைவிட்டு வெளியேறும் நிலைதோன்றும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்டின் மிகமுக்கியமான இந்த கட்டத்தில் சர்வதேச சமூகத்தின் பங்களிப்பு அவசியமாகும்.

இந்தப் பணிகள் சாதகமான முடிவொன்றினை அடைவதற்கு பிரிட்டன்  தம்மாலான அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் என அந்நாட்டு அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் கோரியுள்ளார்.

குறிப்பாக அவசரமான விடயங்களான காணிவிடுவிப்பு காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றன தொடர்பில் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதனையும் உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவரின் கருத்துக்களை செவிமடுத்த பிரிட்டன் அமைச்சர் இலங்கை தொடர்பில் பிரிட்டன் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான ஈடுபாட்டினை கொண்டிருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் புதிய அரசியலமைப்பு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தமது வாழ்த்துக்களையும் தெரிவித்தார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Leave a comment