சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் – முன்னாள் எம்பி சந்திரகுமார்

288 0

சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகத்தை உருவாக்குவோம் –  முன்னாள் எம்பி சந்திரகுமார்

எப்பொழுது எங்கள் சமூகம் சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகமாக மாற்றம்  பெறுகிறதோ  அப்போதுதான் எங்கள் சிறுவர்களின் பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டு ஆரோக்கியமான நல்ல சிறுவர்களுக்கான சூழலையும் ஏற்படுத்த முடியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சி அம்பாள்குளம் விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற  சிறுவர் தின நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

நாளாந்த ஊடகங்களில் சிறுவர்கள் தொடர்பில் வெளிவருகின்ற செய்திகள் சிறுவர்களுக்கு நாளாந்தம் இழைக்கப்படுகின்ற அநீதிகளை வெளிப்படுத்துகிறது. அதுவும் எங்களுடைய பிரதேசங்களில் சிறுவர்களுக்கு எதிரான  அநீதிகள் அதிகமாக  இருக்கிறது. இதற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்து சிறுவர்களுக்கான பாதுகாப்பான சூழலை உருவாக்கும் சிந்தனை எங்கள் சமூகத்தில் குறைவாகவே காணப்படுகிறது.  எனத் தெரிவித்த அவர்

எங்களுடைய நாட்டில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் பல்வேறு சட்டங்கள் உண்டு. இருந்தும் இந்தச் சட்டங்கைள நடைமுறைப்படுத்துபவர்களின் அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு இன்மையால் சிறுவர்களுக்கு இந்தச் சட்டங்களால் பாதுகாப்பை பெறமுடியாதிருக்கிறது.மேலும் இலங்கை அரசில் சிறுவர்களுக்கு என பல அமைச்சர்கள்  உள்ளனர் அமைச்சர் இராஜாங்க அமைச்சர் பிரதி அமைச்சர்  என உள்ளனர், பல உத்தியோகத்தர்கள் உள்ளனர் இருந்தும் என்ன எமது சிறுவர்களின் பாதுகாப்பு குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் சிறுவர்களை பாதுகாக்க வேண்டும் என்ற   சிந்தனையும்  அர்ப்பணிப்பு மிக்க உழைப்பும் குறைந்துகொண்டு செல்வதே  என நான் எண்ணுகிறேன்.

மேலும் எங்களுடை சமூக கட்டமைப்பு எங்கள் சிறுவர்கள் மீது பிரயோகிக்கப்படுகின்ற அநீதிகளை வெளியில் கொண்டுசெல்ல தடையாக இருக்கிறது. இதனால் பெரும்பாலான சிறுவர் துஸ்பிரயோகங்கள்  வெளியில் தெரியாமலே மறைக்கப்படுகிறது. இந்த நிலைமைகள் கூட  சிறார்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. எனவே சிறுவர்கள் தொடர்பில்  பெற்றோர்கள். பாடசாலைகள் அதிகாரிகள், சமூகம் அரசியல்வாதிகள் என எல்லோரும் அர்ப்பணமாக உழைப்பை மேற்கொண்டால் சிறுவர்களுக்கான உத்தரவாதமுள்ள பாதுகாப்பான சூழலை உருவாக்கலாம் என நான் எண்ணுகிறேன்.

சில மேற்குலக நாடுகளில் சிறுவர்கள் தொடர்பில் அதிக அக்கறையோடு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதனை பர்ரத்திருக்கிறோம், சிறுவன்  ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டால் அந்த சமூகமே ஒன்றிணைந்து நீதியை பெற்றுக்கொடுக்கின்ற நிலைமை காணப்படுகிறது. இது எங்களுடைய நாட்டில் மிகவும் குறைவு. ஆனால்  அண்மையில் வித்தியாவின் கொலை வழக்கில் நீதி கிடைத்திருக்கிறது. ஆனால்  பல விடயங்களுக்கு நீதி இல்லை. வித்தியா தொடர்பில் சமூகத்திற்கு இருந்து விழிப்புணர்வே நீதி கிடைக்க காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறே ஒவ்வொரு விடயத்திலும் சமூகத்திற்கு விழிப்புணர்வு அவசியம் அப்போதே  சிறுவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.

சிறுவர்கள் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டியவர்கள் ஆனால் நாங்கள் எங்கள் சமூத்தில் பொறுப்பற்ற சில பெற்றோர்களையும் பார்கின்றோம். எங்களுடைய சிறுவர்கள் யுத்தத்தினால் உடல் உள ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்ட சிறுவர்கள். இந்த யுத்தப் பாதிப்புகளிலிருந்து நாங்கள் சிறிது சிறிதாக மீண்டும் வருகின்றோம் ஆனால்  சிறுவர்களுக்கு எதிராக சமூகத்தின் செயற்பாடுகளை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை.  சட்டமும் ஓழுங்கமும் இவர்களுக்கான பாதுகாப்பை வழங்க தவறிவிடுகிறது.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் பல சிறுவர் இல்லங்கள் உருவாகின. ஆதனை தடுக்க முடியாதிருந்தது. நான் சிறுவர் இல்லங்களுக்கு எதிரானவன். சிறுவர்கள் சிறுவர் இல்லங்களில் வளர்க்கப்படக் கூடாது.இதனையே  சிறுவர் உளவியலாளர்களும்,யுனிசெப் போன்ற நிறுவனங்களும் வலியுத்துகின்றன.  சிறுவர்களை பராமரிக்கும் பொறுப்பை எங்கள் சமூகம் ஏற்க வேண்டும். ஆனால் எங்கள் மண்ணில் புதிது புதிதாக சிறுவர் இல்லங்கள் உருவாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது இது ஆரோக்கியமான சூழல் இல்லை. கிளிநொச்சியில் கல்விபுலத்தில் இருந்து ஓய்வுப்பெற்ற ஒரு சிலர் வறுமையில் வாழும் பெற்றோர்களிடம் சென்று  அவர்களின் பிள்ளைகளை சிறுவர் இல்லங்களுக்கு அனுப்புமாறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். பேற்றோர்களின் அரவணைப்பிலும் அன்பிலும் வளர்க்கபட வேண்டிய சிறுவர்களை ஆசை காட்டி சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கும் சம்பவங்களை நாம் இங்கு காண்கின்றோம். இது கவலைக்குரிய விடயம். சிலர் இதனை  ஒரு வியாபாரமாக செய்கின்றார்கள். சிறுவர் இல்லங்கள் குறைந்து கொண்டு சென்று ஒரு கட்டத்தில் சிறுவர் இல்லங்கள் அற்ற சமூகமாக நாம் மாறவேண்டும் அப்போதுதான் சிறுவர்கள் சரியாகவும் பாதுகாப்பாகவும் வளர்க்கப்பட்டுள்ளார் என்று அர்த்தப்படும்.

தொழில் துறைகளை ஆரம்பித்து மக்களுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்கி அவர்களின் வறுமையை நீக்கி அதன் மூலம் ஒரு நிறைவான சமூகத்தை உருவாக்கி சிறார்களுக்கு பாதுகாப்பான நிலைமையை  ஏற்படுத்துவததனை விடுத்து  சிறுவர் இல்லங்களை உருவாக்குவதில் அக்கறை செலுத்துகின்றனர். இதற்கு அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களும்.  நிர்வாக அதிகாரிகளும் துணை போகின்றனர் இது .வேதனையான விடயம். எனவே  சிறுவர் இல்லங்கள் அற்ற  சமூகத்தை உருவாக்க வேண்டும் சிறுவர்கள் அவர்களது பெற்றோர்கள் மற்றும் வீட்டுச் சூழலில் வளர்க்கப்படவேண்டும் அதுவே அவர்களை எதிர்காலத்தில் நல்ல  பிரஜைகளாக  மாற்றும் எனவும் தெரிவித்தார்.

பாடசாலை அதிபரின் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மருத்துவா் குகராசா, கிளிநொச்சி வலய ஆரம்பி  பிரிவு உதவிக் கல்விப் பணிப்பாளர் கணேசலிங்கம், ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என பலா் கலந்துகொண்டனா்.

Leave a comment