தமிழர் தாயக நிலப்பரப்பை திட்டமிட்டு துண்டுபோட முயலும் நல்லாட்சி அரசு-ரவிகரன்

24713 0
கொக்கிளாய் முகத்துவார தமிழ் மக்களின் பூர்வீக அறுதி உறுதி காணிகளின் உரிமையாளர்களை, தங்களின் காணிகள் தொடர்பில் உரிமை கோரும்படி ஊடகங்களின் மூலம் அறிவித்தல் விடப்பட்டுள்ளது. இது தொடர்பிலேயே வடமாகாணசபை உறுப்பினர் மதிப்புறு துரைராசா ரவிகரன் அவர்கள் மேற்படி கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ரவிகரன் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2017.10.04ம் திகதி வெளிவந்த வலம்புரி, யாழ் தினக்குரல் நாளிதழ்களில்  கொக்கிளாய் முகத்துவாரப்பகுதியில் உள்ள தமிழ் மக்களின் éர்வீக அறுதிஉறுதிக் காணிகளை உரிமை கோரும்படி கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரினால் அறிவித்தல் விடப்பட்டிருந்தது.
கொக்கிளாய் கடல் நீரேரியும் கடலும் சந்திக்கும் மீன்வளம் நிறைந்த கொக்கிளாய் முகத்துவாரப் பகுதியில் இருந்த தமிழ் மக்கள் 1984இல் பகிரங்க அறிவித்தல் மூலம் விரட்டப்பட்டார்கள். இவர்களின் பாரம்பரிய அறுதிஉறுதிக் குடியிருப்புக் காணிகளில் சிங்கள மீனவர்கள் குடியமர்த்தப்பட்டுள்ளார்கள். இக்காணிகள் அறுதிஉறுதிக்குரிய தனியார் காணிகளாக காணப்படுவதால் இவர்களை இக்காணிகளில் நிரந்தரமாக குடியேற்றி நிரந்தர வீட்டுத்திட்டங்களை வழங்க முடியாத நிலமை காணப்படுகிறது.
இதனால் முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன் விரட்டியடிக்கப்பட்ட தமிழ் மக்களில், இக்காணிகளின் உரிமையாளர்களைக் கண்டறிந்து, காணி சுவீகரிப்பு சட்டத்தின் மூலம் இக்காணிகளை கையகப்படுத்துவதே, இந்த அறிவித்தலின் நோக்கமாகும். நல்லாட்சி அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுனர் அவர்களே இதன் சூத்திரதாரியாவார்.
இதே போல். மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் ‘L”வலயம் கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்களின் பூர்வீக வாழ்வாதார வயல் நிலங்களை அபகரித்து சூரியனாறு, முந்திரிகைக்குளம் பகுதிகளில் குடியேற்றப்பட்ட சிங்கள குடியேற்றவாசிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இக்காணிகள் தமிழ் மக்களுக்கு, காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டத்தின் கீழ், வழங்கப்பட்ட அரச காணிகளாக உள்ளன. இவற்றை அத்து மீறி கையகப்படுத்தியுள்ள மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை, தமிழ் மக்களுடைய இக் காணிகளுக்கு 1953,1964 காலப் பகுதிகளில் வழங்கப்பட்ட உத்தரவுப் பத்திரங்கள் உள்ள நிலையிலும் இக்காணிகளை சிங்கள குடியேற்றவாசிகளுக்கு முன்னாள் சனாதிபதி மகிந்த இராசபக்ச அவர்களால் கையொப்பமிடப்பட்ட அழிப்பு ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முடிவின்றி நீண்டு செல்லும் இப் பிரச்சினையை கையாள்வதற்கு அதிகாரிகள் தயங்குகின்றனர். இது தொடர்பில் முடிவெடுக்குமாறு தொடர்ச்சியாக பல மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டபோதும் முல்லை மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் இப்பிரச்சினையை தீர்த்து வைப்பதில் பாராமுகமாக இருந்து வருகின்றார். அண்மைக்காலத்தில் மகாவலி அதிகாரசபை மற்றும் சட்ட உதவி ஆணைக்குழுவினர், அரசியல் வாதிகளையும் அதிகாரிகளையும் தவிர்த்து விபரம் குறைந்த இப்பிரதேசத்தின் பொதுமக்கள் சிலரை அழைத்து பேசி, ஆசைகாட்டி மோசம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இத்தனைக்கும் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் அமைச்சராக நல்லாட்சி அரசின் சனாதிபதி அவர்களே இருப்பதும் மிகவும் வேதனை தரும் விடயமாகும் அரசினால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அரசின் காணி வழங்கல் கொள்கையானது பிரதேசங்களின் இனப்பரம்பல் விகிதாசாரத்தை மாற்றியமைப்பதாக அமையக்கூடாது என விதந்துரைக்கப்பட்டும் கூட நல்லாட்சி அரசு இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் நிலையானது தமிழர் தாயக நிலப்பரப்பரப்பின் வடக்கு கிழக்கினை திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் துண்டு போட முயலும் அரசின் கவனத்தை வெளிச்சம் போட்டுக்காட்டுகின்றது.

Leave a comment