இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான பிரித்தானிய அமைச்சர் மார்க் பீல்ட் இன்று வியாழக்கிழமை இலங்கை வருகின்றார்.
இவர் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை சந்திக்கவுள்ளார். இச்சந்திப்பு கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று நடைபெறவுள்ளது.
வடக்கிற்கு விஜயம் செய்யும் பிரித்தானிய அமைச்சர் அங்கு பலதரப்பட்ட சந்திப்புகளில் கலந்து கொள்ள உள்ளதுடன் காணாமல் போனவர்களின் உறவினர்களையும் சந்தித்து கலந்துரையாட வுள்ளார்.
பிரித்தானியாவின் ஆசிய பசுபிக் விவகாரங்களுக்கான அமைச்சர் மார்க் பீல்ட் இன்றும் நாளை வெள்ளிக்கிழமையும் நாட்டில் தங்கியிருப்பார். இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
அதேபோன்று யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தின் போது வட மாகாண முதலமைச்சர் சி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாட உள்ளார். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து நிலைமைகளை அறியவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்போது வடக்கில் பிரித்தானியாவின் உதவியுடன் மேற்கொள்ளப்படும் கண்ணிவெடி அகற்றும் பணிகளை பார்வையிட உள்ளதுடன், மீள்குடியேற்ற பகுதிகளுக்கு சென்று அந்த மக்களையும் சந்திக்கவுள்ளார்.
நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தை வலுப்படுத்தும் இலங்கையின் நடவடிக்கைகள் குறித்து பிரித்தானிய அமைச்சர் தனது விஜயத்தில் கூடிய கவனம் செலுத்தவுள்ளார்.
ஆசிய மற்றும் பசுபிக் விவகாரங்களுக்கான வெளிவிவகாரப் பணியகத்தின் அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் அமைச்சர் மார்க் பீல்ட் இலங்கைக்கு விஜயம் செய்யும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.