எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தனது பொறுப்பினை உரிய முறையில் மேற்கொள்ளத் தவறிவிட்டார். நல்லாட்சியில் மக்களுக்கு பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ளன. எனினும் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கரிசனையற்றிருக்கிறார். பாராளுமன்றில் அவர் கூடுதலான நேரங்களில் தூங்கிக்கொண்டிருக்கிறார். அரசாங்கத்திற்கு சாமரம் வீசுகின்ற எதிர்க்கட்சி நியமிக்கப்பட்டிருப்பதனால் பாராளுமன்றின் ஜனநாயகம் கடுமையாக மீறப்படுவதாக கூட்டு எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று பொரளையிலுள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சைட்டம், மத்திய வங்கி பிணைமுறி, பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் விவகாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் கவனம் செலுத்தவில்லை. எனவே நாட்டு மக்கள் சார்பாக பேசுவதற்கு எவரும் இல்லாமையினால்தான் மக்கள் தற்போது வீதிக்கிறங்கியுள்ளனர். ஆகவே நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கான முழுப்பொறுப்பையும் சபாநாயகரே ஏற்க வேண்டும்.
மேலும் சபாநாயகர், பாராளுமன்றில் 54 உறுப்பினர்களைக் கொண்டுள்ள கூட்டு எதிர்க்கட்சியை எதிர்க்கட்சியாக ஏற்றுக்கொண்டு அதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்திருப்பின் இவ்வாறு மக்கள் வீதிக்கிறங்கி போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது. அத்துடன் கூட்டு எதிர்க்கட்சியால் தற்போது பாராளுமன்றில் கேள்வி எழுப்ப முடியாது, கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கும் செல்ல முடியாது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேரைக்கொண்ட மக்கள் விடுதலை முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி கோப்குழுவில் நான்கு பேர் அங்கம் வகிக்கின்றனர். எனினும் ஐம்பத்து நான்கு உறுப்பினர்களைக்கொண்ட கூட்டு எதிர்க்கட்சி சார்பில் ஒருவர் மாத்திரமே கோப் குழுவில் அங்கம் வகிக்கின்றார்.
ஆகவே இதில் என்ன ஜனநாயகம் உள்ளது? நாட்டில் ஜனநாயம் உள்ளதாக அரசாங்கம் பெருமையடித்துக்கொள்கிறது. பாராளுமன்ற அமர்வுகள் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படு கின்றன. ஆயினும் நேரடி ஒளிபரப்பு நேரத்தில் உரையாற்றுவதற்கு கூட்டு எதிர்க்கட்சிக்கு சந்தர்ப்பம் வழங்கப்படு வதில்லை என்றார்.