அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளில் உள்துறை செயலர் ரெக்ஸ் ட்ரில்லர்சன் அதிருப்தி அடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக அவர் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுக்கும் முடிவுகளில் உள்துறை செயலர் ரெக்ஸ் ட்ரில்லர்சன் அதிருப்தி அடைந்துள்ளதால் ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், இது தொடர்பாக அவர் பதிலளித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகத்தில் உள்துறை செயலராக இருப்பவர் ரெக்ஸ் ட்ரில்லர்சன். சமீபத்திய காலமாக டிரம்ப் எடுக்கும் முக்கிய முடிவுகளில் ட்ரில்லர்சன் அதிருப்தி அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. குறிப்பாக வடகொரியா விவகாரத்தில் ட்ரில்லர்சனின் கருத்துக்களை டிரம்ப் நிராகரித்ததாகவும், இதன் காரணமாக அவர் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் செய்திகள் இறக்கை கட்டி பறந்தன.
இதற்கெல்லாம் உச்சகட்டமாக தனிப்பட்ட உரையாடலின் போது டிரம்ப்-ஐ கயவன் என ட்ரில்லர்சன் அழைத்ததாக ஒரு செய்தி பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில், மேற்கண்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ட்ரில்லர்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “ராஜினாமா என்ற முடிவை பற்றி நான் சிந்திக்கவில்லை. அமெரிக்காவை முன்னேற்றுவது மற்றும் அதிபரின் முடிவுகளை திறம்பட செயல்படுவது மட்டுமே எனது பணியாக கருதுகிறேன்” என்று கூறியுள்ளார்.
அந்நாட்டு உள்துறை செயலகமும், ட்ரில்லர்சன் ஒரு போதும் டிரம்ப்பை தகாத வார்த்தைகளால் அழைத்தது இல்லை என விளக்கமளித்துள்ளது.
இதற்கிடையே, வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் சாரா, “அதிபர் டிரம்ப்பின் நம்பிக்கைக்கு உரியவராக ட்ரில்லர்சன் இருக்கிறார்” என இவ்விவகாரம் குறித்து தெரிவித்துள்ளார்.
மேலும், “ராஜினாமா என்பதை பற்றி ட்ரில்லர்சன் என்றும் என்னிடம் பேசியதில்லை” என அமெரிக்க துணை அதிபர் பென்ஸ் கூறி இவ்விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.