லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு: தெளிவான காரணம் கிடைக்காமல் எப்.பி.ஐ திணறல்

7089 0

அமெரிக்காவை அலற வைத்த லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்டீவன் எதற்காக இப்படி செய்தார்? என்பதை கண்டறிய முடியாமல் எப்.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் திணறி வருகின்றன.

அமெரிக்காவை அலற வைத்த லாஸ் வேகாஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்டீவன் எதற்காக இப்படி செய்தார்? என்பதை கண்டறிய முடியாமல் எப்.பி.ஐ உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் திணறி வருகின்றன.

அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே கடந்த 1-ந் தேதி இரவில் இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. அப்போது அங்கு கூடியிருந்த மக்களை குறிவைத்து ஸ்டீபன் கிரேக் பாட்டாக் (வயது 64) என்பவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில், 59 பேர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அமெரிக்க வரலாற்றில் மிகவும் மோசமான இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை நிகழ்த்திய ஸ்டீபன் பாட்டாக்கும் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். நெவாடா மாகாணத்தின் மெஸ்குயிட் பகுதியை சேர்ந்த இவர், கடந்த மாதம் 28-ந் தேதி முதல் அந்த ஓட்டலில் தங்கியுள்ளார்.

அவரது அறையை அதிரடிப்படையினர் சோதனையிட்ட போது ஏராளமான துப்பாக்கிகள் அங்கே குவித்து வைக்கப்பட்டு இருந்தன. மேலும் அவரது வீட்டிலும் பல்வேறு நவீன துப்பாக்கிகள் இருந்தன. அவற்றை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். மொத்தம் 47 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு நிறுவனங்கள் கூறியுள்ளன.

அமெரிக்காவை உலுக்கிய இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக புலனாய்வு நிறுவனங்கள் விசாரணையை தொடங்கி உள்ளன. இது பயங்கரவாத தாக்குதலா? அல்லது தனிநபர் விரோதமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. எனினும் விசாரணையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் இல்லாததால், அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

இது விரிவாக திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தாக்குதல் எனவும், கொலையாளி மனநோயாளியாக இருக்கக்கூடும் எனவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். எனவே அனைத்து வழிகளிலும் விசாரணை நடந்து வருவதாக அவர்கள் கூறினர்.

இதற்கிடையே ஸ்டீபன் பாட்டாக் தங்கள் இயக்கத்தை சேர்ந்த போராளி எனவும், இந்த தாக்குதலுக்கு நாங்களே காரணம் எனவும் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு அறிவித்து உள்ளது. ஆனால் அந்த அமைப்புடன் பாட்டாக்குக்கு தொடர்பு இருந்ததற்கான எந்தவித ஆதாரமும் இதுவரை சிக்கவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு எந்த துப்பும் கிடைக்காமல் அதிகாரிகள் திணறி வரும் நிலையில், ஸ்டீபன் பாட்டாக்குடன் வசித்து வந்த அவரது காதலியான மாரிலோ டான்லே (62) நேற்று முன்தினம் அமெரிக்கா திரும்பினார். லாஸ் வேகாஸ் நகரில் ஸ்டீபன் பாட்டாக் வெறியாட்டம் போட்டபோது, இவர் பிலிப்பைன்சில் இருந்தார்.

தற்போது நாடு திரும்பியுள்ள மாரிலோ டான்லேவிடம் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். எனினும் அவரை கைது செய்யாமல் பின்னர் விடுவித்தனர். இவர் பிலிப்பைன்சில் இருந்த போது அவருக்கு 1 லட்சம் டாலர் பணத்தை ஸ்டீபன் பாட்டாக் அனுப்பி வைத்ததை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த மாரிலோ கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் பணிக்காக சென்று, அங்கே குடியேறியவர் ஆவார்.

இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நேற்று லாஸ் வேகாஸ் நகருக்கு சென்றார். அங்கு அவர், தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களை நேரில் சந்தித்து, இரங்கல் தெரிவித்தார். மேலும் படுகாயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி நம்பிக்கை ஊட்டினார்.

முன்னதாக, ‘இந்த தாக்குதல் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிகமிக கொடூரமானது’ என வர்ணித்து இருந்த டிரம்ப், ‘ஸ்டீபன் பாட்டாக் ஒரு நோயாளி, கிறுக்கன். அவனுக்கு நிறைய பிரச்சினைகள் இருந்திருக்கும்’ என யூகிப்பதாகவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a comment