போக்குவரத்துக்கழகங்களுக்கு நிலுவை தொகையை வழங்க வேண்டும்: ராமதாஸ்

309 0

போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களுக்கு செப்டம்பர் மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை.

அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கோவைக் கோட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கு அரை மாத ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது. போக்குவரத்துக் கழக ஓய்வூதியர்களுக்கு இன்னும் ஓய்வூதியம் தரப்படவில்லை.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அதிக பணியாளர்கள் இருப்பது தான் நிதி நெருக்கடிக்கு காரணம் என்று கூறினார்கள். ஆனால், அண்மைக்காலங்களில் மட்டும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பல்வேறு இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தின் நிதி நிலை மேம்பட்டிருக்க வேண்டும். ஆனால், நிலைமை மோசமடைந்திருக்கிறது.

தமிழக அரசு தலையிடுவதன் மூலம் செப்டம்பர் மாத ஊதியம் சில நாட்களில் கிடைத்து விடலாம். ஆனால், நிதி நெருக்கடி நிரந்தரமாக தீர்க்கப்பட்டால் தான் ஆசிரியர்களும், ஊழியர்களும் எதிர்கொண்டு வரும் இன்னல்களுக்கு தீர்வு காண முடியும். நிதி நெருக்கடியால் பணியாளர்களுக்கு பதவி உயர்வு, அகவிலைப்படி உயர்வு உள்ளிட்டவை பல ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. இதனால் ஊழியர்களின் செயல்பாட்டுத் திறன் குறைவதை அரசு உணர வேண்டும். அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்கப்பட வேண்டும்.

அதேபோல், போக்குவரத்துக் கழகங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகைகளை வழங்கியும், இழப்பு மானியம் அளித்தும் போக்குவரத்துக் கழகங்கள் சீராக இயங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Leave a comment