ஆர்.எஸ்.எஸ். பேரணியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்க கூடாது என அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு, தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
அ.தி.மு.க. கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்கள் தனியரசு (கொங்கு இளைஞர் பேரவை), தமிமுன் அன்சாரி (மனிதநேய ஜனநாயக கட்சி), கருணாஸ் (முக்குலத்தோர் புலிப்படை) ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மதுரையில் 8-ந் தேதி ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கிறது. இது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ இதுவரை மறுப்பேதும் தெரிவிக்கவில்லை. மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆட்சியின் போது ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு பலமுறை காவல்துறை அனுமதி மறுத்தது.
ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த ஊர்வலத்திற்கு நிபந்தனைகள் இன்றி அனுமதி வழங்கி இருக்கிறார். இது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகமாகும். எனவே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைப்பதை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுக்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தினால் சமூக அமைதி கெடாமல் இருக்க சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் அவர்கள் கூறியுள்ளனர்.