தமிழக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்து வந்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெறுவதையொட்டி அவருக்கு சென்னை விமான நிலையத்தில் வழியனுப்பு விழா நடைபெற்றது.
தமிழக ஆளுநராக 5 ஆண்டுகள் பணியாற்றிய ரோசய்யாவின் பதவிகாலம் கடந்த ஆண்டு ஆகஸ்டு 30-ந்தேதி முடிவடைந்தது. இதையடுத்து மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்து வரும் வித்யாசாகர் ராவ் தமிழகத்துக்கு பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். அவர் கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ந்தேதி தமிழக பொறுப்பு ஆளுநர் என்ற கூடுதல் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.
இதையடுத்து தமிழகத்துக்கு முழு நேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய ஆளுநர் நாளை பதவி ஏற்க உள்ள நிலையில், ஓராண்டாக பொறுப்பு ஆளுநராக பதவி வகித்த வித்யாசாகர் ராவ் இன்று விடைபெற்றார். அவருக்கு சென்னை விமான நிலையத்தில் இன்று காலை பிரிவுபசார விழா நடைபெற்றது.
விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், டி.ஜி.பி. ராஜேந்திரன், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அமைச்சர்கள் கலந்துகொண்டு சால்வைகள் அணிவித்து வாழ்த்தி வழியனுப்பினர்.