அடுத்த மே தினத்திற்குள் வடக்கு மக்களுக்கு நிரந்தரத் தீர்வு- அமைச்சர் ராஜித அதிரடி அறிவிப்பு!

323 0

இறுதிக்கட்ட போரின்போது இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த, ஒப்படைக்கப்பட்ட மற்றும் கைது செய்யப்பட்ட நிலையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 200 நாட்களைக் கடந்தும் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டம் நியாயமானதென அரசாங்கம் முதன்முறையாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்த தகவலை தெரிவித்த அரசாங்கத்தின் அமைச்சரவைப் பேச்சாளரான ராஜித சேனாரத்ன, இதற்கு முன்னர் தான் உறுதியளித்ததுபோல் அடுத்துவரவுள்ள மே தினத்திற்கு முன்னர் காணாமல் போனோருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விபரங்களை வெளியிடவும் நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று 228ஆவது நாளாக தமது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல் இறுதிக்கட்ட போரின்போது இராணுவத்தினரிடம் சரணடைந்த மற்றும் கைதானவர்களது பட்டியலை வெளியிடுமாறு வலியுறுத்தி தமிழர் தாயகத்தின் ஏனைய பிரதேசங்களிலும் 200 நாட்களையும் கடந்து போராட்டங்கள் தொடர்கின்றன.

இந்த நிலையில் பல்வேறு கஷ்டங்களுக்கும் நெருக்கடிகளுக்கும் மத்தியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களுக்கு மைத்திரி – ரணில் தலைமையிலான தற்போதைய தேசிய அரசாங்கம் எந்தவித தீர்வும் வழங்காதது இழுத்தடிப்பு செய்வது குறித்து இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் அரசாங்கத்தின் பேச்சாளரிடம் வினவினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன ‘அவர்களது கோரிக்கை மிகவும் நியாயமானதாகும். அவர்கள் தங்களது உறவுகளை தேடித்தருமாறு கோரவில்லை.

மாறாக அவர்க்ள உயிருடன் இருக்கின்றார்களாஇ இல்லையா என்பதை அறிவிக்குமாறே கோருகின்றனர். அப்படியும் இயலாவிட்டால் சிறையிலிருப்போரின் எண்ணிக்கை என்பதை கூறுமாறு கோருகின்றனர். நானும் அதனையே வலியுறுத்துகின்றேன்.

ஜனாதிபதியுடனும் நான் அங்கு சென்று அவர்களை சந்தித்திருக்கின்றேன். காணாமல் ஆக்கப்பட்ட விவகாரத்தை கண்டறிதல் மற்றும் காணி மீளளிக்கப்படும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக இடம்பெறும்.

கடந்த மே தினத்தன்று வடக்கிற்குச் சென்று அவர்களை சந்தித்தபோது அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வைத்தந்த பின்னரே அடுத்த மே தினத்திற்கு வருவதாக கூறியிருந்தேன்’ என்று பதிலளித்தார்.

இதேவேளை இராணுவத்தினரது வசமிருக்கும் தங்களது காணிகளை மீளக் கையளிக்குமாறு முல்லைத்தீவு – கேப்பாபுலவு மக்கள் 200 நாட்களைக் கடந்தும் இராணுவ முகாமுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ள கொட்டிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அண்மையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்த முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச, இராணுவத்தினர் வசமிருக்கும் மக்களது காணிகளை கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு இனவாத சாயம் பூசி அவற்றை எதிர்த்துவரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியினரே மக்களது காணிகளை விடுவிக்குமாறு கூறும்போது அரசாங்கத்தின் அடுத்த நடவடிக்கை எதுவாக இருக்குமென ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன ‘பசில் ராஜபக்ச கூறியிருப்பதை நானும் கண்டேன். அது மிகவும் சிறந்த அறிவிப்பாகும். அனைவரும் காணிகளை மீளளிப்பதற்கே விருப்பப்படுகிறார்கள்.

இப்போது காணிகளை மீள வழங்குவதலே எஞ்சியிருக்கிறது. எதிர்ப்பு வெளியிட யாரும் இல்லைதானே. பசில் ராஜபக்ச உள்ளிட்டோரே இவ்வளவு நாட்களாக அதற்கு தடையாக இருந்துவந்துள்ளனர். அரசிலிருக்கும்போதும், எதிர்கட்சியாக இருக்கும்போதும் பல ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

அதேபோன்று இராணுவம் மீது போர்க் குற்றச்சாட்டு சுமத்தப்படுவதாக பெசில் ராஜபக்ச இவ்வளவு காலமும் தெரிவித்துவந்த நிலையில் போரில் இராணுவம் குற்றம் புரிந்ததாக இப்போது அவரே ஏற்றக்கொண்டிருக்கின்றார்.

எனவே பசில் ராஜபக்ச கூறுவதை மஹிந்த ராஜபக்ச கடைபிடித்திருந்தால் ,அந்த அரசாங்கம் இன்னும் ஆட்சியில் இருந்திருக்கும். ஆனால், கோட்டாபய ராஜபக்சவின் கதைகளைக் கேட்டே அவர்கள் செயற்பட்டதால் இந்த நிலைமை அவர்களுக்கு ஏற்பட்டது. இந்த நாடு மட்டுமல்ல, கடலைக்கடந்தும் இன்னும் பல நாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து செயற்பட்ட ஒரேயொரு ராஜபக்சதான் பசில் ராஜபக்ச’ என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a comment