ஏறாவூரில் தாய் மற்றும் மகள் இரட்டைப் படுகொலைச் சந்தேக நபர்களில் நால்வர் மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகளால் ஏறாவூர் சுற்றுலா நீதிவான் நீதிமன்றத்தில் புதன்கிழமை (04) ஆஜர் செய்யப்பட்ட அதேவேளை பிணையில் விடுதலையான மற்றுமிருவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராயினர்.
இவ்வேளையில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது சந்தேக நபர்களில் நால்வரையும் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவானும் மேலதிக மாவட்ட நீதிபதியுமாகிய முஹம்மத் இஸ்மாயில் முஹம்மத் றிஷ்வி உத்தரவிட்டுள்ளார்.
ஏறாவூர் நகர பிரதேசத்தில் முகாந்திரம் வீதி முதலாவது குறுக்கு ஒழுங்கையிலுள்ள வீட்டில் வசித்துவந்த தாயான நூர்முஹம்மது உஸைரா (வயது 56) அவரது திருமணமாகிய மகளான ஜெனீராபானு மாஹிர் (வயது 32) ஆகியோர் கடந்த செப்டெம்பர் 11ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 6 சந்தேக நபர்களும் கடந்த செப்டெம்பா மாதத்திலிருந்து தொடர்ச்சியாக விளக்கமறியல் உத்தரவில் இருந்து வந்த நிலையில் அவர்களில் இருவர் கடந்த செப்டெம்பர் மாதம் நடுப்பகுதியில் ஒருவரும் இறுதிப் பகுதியில் மற்றொருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.