அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையில் வெளிப்படை அவசியம் – ரவூப் ஹக்கீம்

305 0

அரசமைப்பு மறுசீரமைப்பு நடவடிக்கையானது வெளிப்படையாகவும், அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலும் அமையவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மாகாணசபைகளுக்குரிய தேர்தல் உரிய காலத்தில் நடைபெறும் என்பதை உறுதிப்படுத்தவேண்டிய கடப்பாடு பாராளுமன்றத்திற்கு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

இலங்கையில் கூட்டப்பட்டு 70ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற விசேட பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றிய இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் மாற்றுக்கருத்துகளை முன்வைப்பதற்குரிய சந்தர்ப்பங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. மாற்றுக் கருத்துகளை முன்வைக்கும்போது அவை வன்முறையை ஏற்படுத்தும் கருத்துகளாகவும், தேசியத்துக்கு எதிரான சொற்களாகவுமே பார்க்கப்படுகின்றது.

மூன்று தசாப்தகால போர் முடிவுக்குகொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மக்களிடையே, சமூகங்களிடையே நம்பிக்கையை, ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கு தவறப்பட்டுள்ளது. இது மோசமான மனநிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.

அதேவேளை, புதிய அரசமைப்பை ஏற்படுத்துவதற்கான ஆரம்பநிலையிலேயே இருக்கின்றோம். கடந்தகால தவறுகளைத் தவிர்ப்பதற்காக இந்தச் செயற்பாட்டை ஆரம்பித்துள்ளோம். எந்தவொரு மறுசீரமைப்பு முன்வைக்கப்பட்டாலும் அது வெளிப்படையானதாகவும், ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும். கட்சி சார்ந்த அரசியலுடன் இவை மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்தார்

Leave a comment