இந்தியா பாகிஸ்தான் சீனா உள்ளிட்ட ‘நட்பு’நாடுகளின் ஆயுதங்களுடன் தமிழினப்படு கொலையில் இறங்கிய இலங்கை ராணுவத்தின் எண்ணிக்கை ஐந்து அல்லது ஆறு லட்சம் இருக்கும். கொஞ்சம் கூடுதலாகவும் இருக்கலாம். (தமிழர் தாயகத்திலேயே ஒன்றரை லட்சத்துக்கும் அதிகமான ராணுவம் நிற்கிறது எனில் மொத்த ராணுவ பலம் எவ்வளவு இருக்கவேண்டும்!)
தமிழ் இனத்தை ஒட்டுமொத்த அழிவிலிருந்து காப்பதற்காக சொற்ப ஆயுதங்களுடன் போராடிய விடுதலைப் புலிகளின் எண்ணிக்கை சில ஆயிரங்கள்தான்……
ஏறக்குறைய 30 ஆண்டுகள் எண்ணிக்கையில் குறைந்த போராளிகளைக் கொண்டே அசுர பலம் பொருந்திய இலங்கை ராணுவத்தைத் தங்கள் தாய்மண்ணிலிருந்து விரட்டியடிக்கப் புலிகளால் முடிந்ததென்றால் அவர்களது உடல்ரீதியான வலுவும் உளவியல் ரீதியான உறுதியும் தான் அதற்கு அடிப்படை.
ஸ்பார்ட்டாவைக் காக்க லியோனிடாசு தலைமையில் வெப்பவாயிலில் நின்ற 300 வீரர்களும் பிரபாகரன் தலைமையில் களத்தில் நின்ற மாவீரர்களும் வேறுவேறல்ல! அவர்கள்தான் இவர்கள்.. இவர்கள் தான் அவர்கள்.
ஸ்பார்ட்டா வீரர்களுக்கு இருந்த வலுவும் உறுதியும் புலிகளுக்கும் இருந்ததால்தான் புலிகளைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்க முயல்கிறது இலங்கை. அந்த மாவீரர்களை நயவஞ்சகமாகவாவது கொல்லும் நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது.
வெட்டப்பட்ட தென்னை மரத்தைத் தோளில் தூக்கிச் செல்லும் 2 பெண்போராளிகளின் நிழற்படத்தைப் பார்க்கும்போதெல்லாம் நெகிழ்ந்து போகிறவன் நான். வலுவான அந்தப் போராளிகள்தான் இன்று மர்மமான முறையில் மரணத்தைத் தழுவிக் கொண்டிருக்கிறார்கள்.
வட மாகாண சபை முதல்வர் விக்னேஸ்வரனையும் அவரைப் பின்பற்றுவோரையும் தவிர வேறெவரும் இந்த மர்ம மரணங்கள் குறித்து உண்மையாகக் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. விக்கியின் மாணவரும் சம்பந்தரின் மனசாட்சியுமான சுமந்திரன் நீலிக்கண்ணீர் வடிப்பதற்கே கூலி கேட்பார் போலிருக்கிறது. ‘இது உண்மையெனில் கடுமையான விஷயம்’ என்கிற நான்கு வார்த்தைக்குமேல் பேசத் துணியவில்லை அவர்.
‘இறந்த போராளிகளில் பலரும் வயதில் இளையவர்கள்…. இனம்காண இயலாத நோயால் அவர்கள் இறந்திருப்பதுதான்பிரச்சினை…. ராணுவத்தால் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்ட அனைத்துப் போராளிகளையும் சர்வதேச மருத்துவ நிபுணர்களைக் கொண்டு பரிசோதித்தாக வேண்டும்…. அவர்களது மருத்துவச் சோதனைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிடவேண்டும்’ என்கிறது வடமாகாண சபை.
2009க்குப் பிறகு 12000 போராளிகளைப் புனர்வாழ்வுக்கு உட்படுத்தியிருக்கிறது இலங்கை ராணுவம். அவர்களில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் மர்மமாக இறந்திருக்கும் நிலையில் பலர் நடைப்பிணங்களாகவே நடமாடுகிற நிலையில் சந்தேகம் எழுவதை எப்படித் தவிர்க்க முடியும்?
ராணுவமுகாம்களில் தங்களுக்கு செலுத்தப்பட்ட ஊசி மருந்துகள் தரப்பட்ட உணவுகள் குறித்து முன்னாள் போராளிகள் கேள்வி எழுப்புகின்றனர். இத்தனைக்கும் கிடைப்பதை உண்டே உடலைப் பேணியவர்கள் அவர்கள்.
ஆனையிரவுக்கு சற்றுத்தொலைவில் பாதி வரண்டிருந்த ஒரு ஏரிக்கரையில் பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் போராளிகளை ஒரு கோடை வெயிலில் சந்தித்த நாளை இப்போதும் மறக்க முடியவில்லை. குழிகளுக்குள் பதுங்கியிருந்த நண்டுகளைப் பிடித்துச் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் அவர்கள். என்னுடைய அகத்தின் வேதனையை முகம் உணர்த்திவிட ‘இதுவே இப்போ கூடுதல்… எப்படியும் பக்கத்து கிராமத்திலிருந்து யாராவது சோறு கொண்டுவந்து கொடுப்பாங்கள்’ என்று எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.
எதையும் எதிர்பார்க்காமல் தங்கள் தாய்மண்ணுக்காக முழுமையாக தங்களை அர்ப்பணித்துக்கொண்ட அவர்கள்தான் கேள்விகளை எழுப்புகிறார்கள் இப்போது! அவர்கள் உணவில் ரசாயனங்களோ நச்சோ கலக்கப்பட்டிருக்குமோ அவர்களுக்கு விஷ ஊசி போடப்பட்டிருக்குமோ என்கிற சந்தேகங்கள் வலுக்கின்றன.
உறுதிமிக்க அந்தப் போராளிகளை உடலளவிலும் உள்ளத்தளவிலும் சிறிது சிறிதாகச் சிதைக்க இலங்கை ராணுவம் திட்டமிட்டு குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்திருந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை. ஒரு இனத்தின் சுயமதிப்பைச் சிதைக்க திட்டமிட்டு கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒரு பொறுக்கி ராணுவம் அது. எம் இனத்தை அழிக்க சகல அதர்ம வழிமுறைகளையும் பயன்படுத்தியவர்கள் எம் இனத்துக்காக ஆயுதம் ஏந்திய போராளிகளை அழிக்க – விஷ ஊசி நச்சு உணவு – என்று எந்த எல்லைக்கும் போயிருக்கக் கூடும்.
பத்து மாதங்களுக்கு முன்பே ‘தமிழக அரசியலில்’ போராளிகளின் மர்ம மரணம் தொடர்பான கட்டுரை வெளியானது. புற்றுநோய்க்கு இரையான சகோதரி தமிழினியை நினைவுகூர்ந்து எழுதிய கட்டுரை அது. பல்வேறு இணையதளங்களிலும் அந்தக் கட்டுரை மறுபிரசுரம் செய்யப்பட்ட நிலையில் பலர் மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் அருளானந்தம் மாத்யூ என்கிற கடலோடி.
கனடாவில் வசிக்கும் அருளானந்தம். 2007 – 2008ல் NEW FOUND LANDனுக்கும் RECOUNTRY EASTவுக்கும் இடையே பயணிகள் படகு சேவையில் ஈடுபட்டவர். அப்போது தமக்கு ஏற்பட்ட ஒரு நேரடி அனுபவம் குறித்து அவர் எழுதியிருந்தார்.
RECOUNTRY EAST நகரின் மேயர் ஜிம் அவரது மகன் ரிச்சர்ட் இருவரும் அருளானந்தத்தின் படகில் அடிக்கடி பயணம் செய்ய நேர்ந்தது. அவர்கள் அவருடன் நட்புடன் பழகினார்கள். தந்தை மகன் இருவருமே கனடா ராணுவத்தில் இருந்தவர்கள். ஒரு கொடிய நிகழ்வால் ரிச்சர்ட் உடல்நலக் குறைவுக்கு உள்ளானதையடுத்து தொடர் சிகிச்சைக்காக அடிக்கடி படகுப் பயணம் மேற்கொண்டனர்.
கொசாவோ உள்நாட்டுப் போரின்போது அங்கு சென்ற கனடா அமைதி காப்புப் படையில் ரிச்சர்ட் இடம்பெற்றிருந்தார். ஒருநாள் கொசாவோ வீரர்களிடம் ரிச்சர்ட் முதலான 6 கனடா வீரர்கள் பிடிபட்டனர். அவர்களுக்கு விஷ ஊசி செலுத்திய கொசாவோ வீரர்கள் அதன்பின் அவர்களை விடுவித்துவிட்டனர். 6 பேரில் ஐந்து பேர் மிகக் குறுகிய காலத்திலேயே உயிரிழந்தனர். ரிச்சர்ட் மட்டுமே தொடர் சிகிச்சைகளால் தாக்குப்பிடித்தார். இதெல்லாம் ஜிம் மூலம் அருளானந்தம் அறிந்த தகவல்கள்.
ஒருநாள் இரவு படகு சேவையெல்லாம் முடிந்தபிறகு ஜிம்மிடமிருந்து அருளானந்தத்திற்கு அவசர அழைப்பு வந்தது. ரிச்சர்ட் ஆபத்தான நிலையில் இருப்பதாக ஜிம் கூற படகு மூலம் அவரை அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். சுமார் 6 மாத சிகிச்சைக்குப் பின் ரிச்சர்ட் உயிர்பிழைத்தார் – என்கிறார் அருளானந்தம்.
2008க்குப் பின் அருளானந்தம் மாத்யூ கனடாவின் வேறு பகுதிக்குப் போய்விட்டார். ரிச்சர்ட் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது அவருக்குத் தெரியவில்லை. இலங்கை ராணுவம் இப்படியெல்லாம் விபரீதமாக நடந்துகொள்ள நிச்சயமாக வாய்ப்பிருக்கிறது என்பது அவரது கருத்து.
அருளானந்தத்தின் கருத்து அவரது நேரடி அனுபவம் சார்ந்தது. அதை வழிமொழிவதாக இருக்கிறது நீண்ட கால மருத்துவ அனுபவம் கொண்ட டாக்டர் ஞான சங்கரலிங்கம் லண்டனிலிருந்து அண்மையில் தெரிவித்திருக்கும் கருத்து.
‘புனர்வாழ்வுக் கைதிகளில் சந்தேகத்துக்கிடமான வகையில் இறந்திருப்பவர்கள் ஓரிருவரில்லை….. 107 பேர். இதை எப்படி இயற்கையான மரணம் என்று அலட்சியப்படுத்த முடியும்’ என்பது சங்கரலிங்கத்தின் வாதம். உணவு அல்லது மருந்து மூலம் சிறிதுசிறிதாக விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் உடனடியாக மரணம் சம்பவிக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக இறக்க வாய்ப்பிருக்கிறது என்கிறார் அவர்.
ஈயம் – பாதரசம் arsenic கதிர்வீச்சை ஏற்படுத்தும் நச்சுக்கள் organo phosphates போன்ற பூச்சிக்கொல்லிகள் உள்ளிட்ட பல்வேறு நச்சுப் பொருட்களை மெல்ல மெல்லக் கொல்லும் உயிர்க்கொல்லிகளாக இலங்கை பயன்படுத்தியிருக்கக் கூடும் என்கிறார் சங்கரலிங்கம்.
சோர்வு தளர்ச்சி தற்கொலை எண்ணம் எதையும் உற்றுக் கவனிக்க முடியாமை – உள்ளிட்ட உளவியல் பிரச்சினைகள்….
பார்வை இழப்பு வயதுக்கு மீறிய முதுமை தூக்கமின்மை பேச்சுக்குளறுபடி – உள்ளிட்ட நரம்பியல் நோய்கள்……
தசை மற்றும் மூட்டு உபாதைகள் பலவீனம் உடல் வலு இழப்பு – உள்ளிட்ட பிரச்சினைகள்….
நோய் எதிர்ப்பு சக்தியை இழக்கச் செய்வதுடன் எளிதில் நோய்த்தொற்றுக்கு உட்படுத்துவது….
புற்றுநோய் ஏற்பட வழிவகுப்பது…..
என்று இந்த மெல்லக் கொல்லும் விஷங்களின் கடுமையான விளைவுகளை சங்கரலிங்கம் பட்டியலிடுகிறார்.
‘இத்தகைய நச்சுப் பொருட்கள் உடலுக்குள் செலுத்தப்பட்டிருந்தால் கண்டறிவது சிரமம். ரத்த அணு எண்ணிக்கை சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாடு ஈ.சி.ஜி. போன்ற வழக்கமான பரிசோதனைகளால் பயனிருக்காது. எல்லாமே இயல்பாக இருப்பதாகத் தோன்றக்கூடும். CT மற்றும் MRI SCAN போன்றவற்றின் மூலமும் எளிதில் கண்டுபிடித்துவிட முடியாது. நச்சுப் பொருள் ஏதேனும் உடலுக்குள் ஊடுருவியிருக்கிறதா – என்பதைச் சோதித்து அறிவதற்கான வசதிகள் இலங்கையில் இல்லை. சர்வதேச மருத்துவ உதவியுடன் மட்டுமே அவற்றை மேற்கொள்ள முடியும்’ என்கிறார் சங்கரலிங்கம்.
இதற்கிடையே யாழ்ப்பாணத்தில் மருத்துவ முகாம் நடத்த வந்த அமெரிக்க விமானப்படை மருத்துவர்களைக் கொண்டு ஒரு சில முன்னாள் போராளிகளைப் பரிசோதிக்க முயன்றார் விக்னேஸ்வரன். அமெரிக்கத் தூதுவரும் அதற்கு சம்மதித்த நிலையில் இலங்கை அரசு முட்டுக்கட்டை போட்டிருக்கிறது. ‘அமெரிக்க மருத்துவர்களின் சேவை எமக்குத் தேவையில்லை’ என்று அவசர அவசரமாக அறிவித்திருக்கிறது.
‘விக்னேஸ்வரன் நீதிபதியாக இருந்தவரா மருத்துவராக இருந்தவரா? மாகாண முதலமைச்சரின் வேலை எதுவோ அதை முதலில் பார்க்கட்டும்’ என்று சிங்களத் தரப்பு அவர் மீது பாய்கிறது. புனர்வாழ்வு என்கிற பெயரில் ஊசி போட்டுக்கொண்டிருந்த முகாம்கள் ராணுவமுகாம்களா மருத்துவ முகாம்களா – என்று நம்மால் திருப்பிக் கேட்கமுடியவில்லை.
விக்னேஸ்வரன் வாய்க்கு வந்தபடி பேசுகிற அரசியல்வாதி இல்லை. அவர் யாரையும் குற்றஞ்சாட்டவும் இல்லை. தன்னுடைய மாகாணத்தில் திடீர் நோய்களால் இறந்திருக்கும் முன்னாள் போராளிகள் குறித்து எழுந்துள்ள ஐயங்களைச் சுட்டிக்காட்டி முறையான மருத்துவச்சோதனை கோர அவருக்கு உரிமை இருக்கிறது.
காணாமல் போன ஆயிரமாயிரம் தமிழ் உறவுகளுக்காகவும் திடீர் திடீரென மரணமடையும் தமிழ்ப் போராளிகளுக்காகவும் விக்னேஸ்வரன் மட்டுமே பேசினால் போதாது. ஒட்டுமொத்தத் தமிழினமும் பேசியாக வேண்டும். ஈழத் தாயகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளிலிருந்தும் மட்டுமின்றி 8 கோடி தமிழர்கள் இருக்கும் தமிழ்நாட்டிலிருந்தும் இதற்கான குரல் எழவேண்டும். தமிழினத்தின் ஒருமித்த குரல் ஓங்கி ஒலிக்க மிகவும் பொருத்தமான நாள் – அனைத்துலக காணாமல் போனோர் நாளான ‘ஆகஸ்ட் 30’.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பே சுற்றிலும் நிற்கிற ராணுவத்துக்கெல்லாம் அஞ்சாமல் ‘காணாமல் போன எம் உறவுகள் எங்கே’ – என்று கேட்டு வன்னி மண்ணின் வீதிகளில் தீப்பந்தத்தோடு வந்து நின்ற இனம் எமது இனம். இந்த இனம் சர்வதேச நாளான ஆகஸ்ட் 30ம் நாளைத் தவறவிடவே கூடாது.
ஆகஸ்ட் 30ம் தேதி காணாமல் போன தமிழ் உறவுகளுக்கும் முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்களுக்கும் நீதிகேட்டுப் போராட தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் இயக்கங்களும் முன்வரவேண்டும்.
எமது மொழியின் அழியாத இலக்கிய அடையாளங்களில் ஒன்றாகவே ஆகிவிட்ட நா.முத்துக்குமாருக்கான வணக்க நிகழ்வை அந்த வானம்பாடி விண்ணில் பறந்த அடுத்த நொடியே பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் நடத்துகிறார்கள் எமது ஈழத் தமிழ் உறவுகள். நமது துயரில் உடனடியாகப் பங்கேற்க வேண்டும் என்கிற அவர்களது உணர்வும் தெளிவும் அவர்களது துயரைப் பகிர்ந்து கொள்வதில் நமக்கு இருக்க வேண்டாமா?
திருட்டு வீடியோவாலும் களவு இணையங்களாலும் வீழ்ந்துகொண்டிருக்கும் தமிழ்ச்சினிமாவை ஈழ உறவுகள்தான் புதிய சந்தைகள்மூலம் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள். அந்த நன்றிக்கடனுக்காகவாவது அவர்கள் துயரில் பங்கெடுக்கவும் நீதி கேட்கவும் தமிழ்த் திரையுலகம் முன்வர வேண்டும். இனப்படுகொலைக்காகவும்இ காணாமல் போன தமிழருக்காகவும்இ மர்ம மரணங்களுக்காகவும் அரசியல் கட்சிகள் போராடினால் போதும் – என்று நினைத்து விலகிநின்று வேடிக்கை பார்க்கக்கூடாது.
இறையாண்மை என்கிற பெயரில் விபரீதங்களை மட்டுமே விதைக்கிறது இலங்கை. இனவெறியும் பிணவெறியும் மட்டுமே அதற்குக் காரணமில்லை. யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன – என்று 26வது மைலில் கோமாவிலேயே கிடக்கும் நமக்கும் நமது ஊடகங்களுக்கும் இதில் மிகப்பெரிய பங்கிருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா தமிழ்நாட்டிலிருந்து 1500 மைல். அங்கே சந்தோஷ்பால் என்கிற (போலி) மருத்துவர் விஷ ஊசி போட்டு 6 பேரைக் கொலை செய்திருக்கும் செய்தியை முதல் பக்கச் செய்தியாக்குகின்றன இங்கேயிருக்கும் பத்திரிகைகள்.
சந்தோஷ்பாலால் கொல்லப்பட்ட 6 பேருக்கும் SUX என்கிற succinylcholine தான் ஊசி மூலம் செலுத்தப்பட்டிருக்கிறது அந்த மருந்தைச் செலுத்திவிட்டால் மூச்சு விடவோ விழிகளை இமைக்கவோ கூட முடியாது அது செலுத்தப்பட்டிருப்பதைக் கண்டறியவும் முடியாது – என்றெல்லாம் விலாவாரியாக செய்தி வெளியிடும் ஊடகங்களுக்கு 26வது மைலில் ஒரு ராணுவமே விஷ ஊசி போட்டுக்கொண்டிருப்பதாக செய்திகள் வெளியாவது தெரியுமா தெரியாதா?
விக்னேஸ்வரன் என்கிற ஒரு முதலமைச்சரே இதுகுறித்து கேள்விகளை எழுப்பியிருப்பது இந்த ஊடகங்களின் கவனத்துக்கு வரவே இல்லையா?
என்ன நினைக்கின்றன இந்த ஊடகங்கள்? தமிழ்நாட்டின் 8 கோடி தமிழர்களுக்கு இலங்கை ஓர் இழிபிறவி என்பது தெரிந்துவிடவேகூடாது என்று நினைக்கிறார்களா? அதுதான் உண்மையெனில் ‘ஆகஸ்ட்-30’ காணாமல் போனோர் நாளன்று அவர்களுக்குப் பாடம் கற்பித்தே ஆகவேண்டும். என்ன செய்யப் போகிறோம் நாம்?