கட்டலோனியா ஸ்பெயினில் இருந்து பிரிந்து விரைவில் தனிநாடாக அறிவித்துக் கொள்ளவுள்ளது.
கட்டலோனிய தன்னாட்சி பிராந்தியத்தின் தலைவர் கார்லஸ் புயிட்ஜ்மொன்ட் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு எதிர்வரும் சில தினங்களில் வெளியாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை இடம்பெற்ற பொதுசன வாக்கெடுப்பில், கட்டலோனியா தனிநாடாக பிரிவதற்கு மக்கள் ஆதரவு வழங்கப்பட்டது.
வாக்கெடுப்பின்போது காவற்துறையினர் வன்முறையைக் கையாண்டதாகவும், இதனால் 900 பேர் வரையில் காயமடைந்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், குறித்த பொதுசனவாக்கெடுப்பின் போது, அதன் ஒழுங்கமைப்பாளர்கள் சட்டத்துக்கு முரணாக செயற்பட்டுள்ளதாக, ஸ்பெயின் மன்னார் ஆறாம் ஃபிலிப் தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்பெயினில் நிலவும் சூழ்நிலைகள் மிகவும் பாரதூரமானது என்றும், மக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.