காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும் – அனந்தி சசிதரன்

11785 0

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கேட்டு எமது அடுத்த தலைமுறையும் போராடும்! மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகளிடம் அனந்தி சசிதரன் உறுதி!

காணாமலாக்கப்பட்டோருக்காக நீதி கேட்டு நாம் முன்னெடுக்கும் போராட்டம் எமது காலத்துடன் முடிந்து போகாது எமது அடுத்த தலைமுறையும் நிச்சயம் போராடும் என வட மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் தன்னைச் சந்தித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகளிடம் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சர்வதேச பிரதிநிதிகள் நடைமுறையிலுள்ள பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்காக அனந்தி சசிதரன் அவர்களுடன் சந்திப்பை மேற்கொண்டிருந்தார்கள். மகளிர் விவகார அமைச்சரின் அலுவலகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (29-09-2017) அன்று மாலை 4.30 மணியளவில் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் இதனை வலியுறுத்தியுள்ளார்.

இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்கள் இருக்கிறார்களா…? இல்லைலயா…? என்பதை அறியாது பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகிக்கொண்டிருப்பதானது மிகவும் கொடுமையான விடயமாகும். இறந்துவிட்டவர்கள் குறித்த கவலை சில காலங்களில் ஆறிவிடும் நிலையில், இருக்கிறார்களா…? இல்லையா…? என்ற தவிப்பு நிலையானது உளவியல் ரீதியில் பெரும் பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. இந்நிலையானது கறையான் அரித்துக் கொண்டிருப்பதைப் போன்று கொடிய வேதனைகளை தினமும் தந்துகொண்டிருக்கின்றது.

என்னைப் பொறுத்தவரையில் தொடர்ச்சியான மக்கள் பணியில் ஈடுபட்டுவருவதால் ஓரளவு மன ஆறுதலடைகின்ற போதிலும் தற்போது உங்களுடன் கதைத்துக்கொண்டிருந்தாலும் எனது மனதில் காணாமலாக்கப்பட்ட எனது கணவரின் நிலைகுறித எண்ணங்கள்தான் ஓடிக்கொண்டிருக்கிறது. சாதாரன மக்களின் நிலை மிகவும் மோசமானதாகவே காணப்படுகின்றது.

அமெரிக்க, இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நம்பியே போரின் இறுதியில் எமது உறவுகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைந்திருந்தோம். நோர்வே, ஜப்பான், அமெரிக்கா மற்றும் பிரித்தானியா உள்ளடங்கிய ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுடன் இந்தியாவும் பின்னணியில் இருந்து செயற்பட்டதென்பது யாவரும் அறிந்திருந்த விடயமாகும். பொதுமன்னிப்பு வழங்கப்படுவதாக இலங்கை இராணுவம் வழங்கிய வாக்குறுதியை நாங்கள் நம்பவில்லை. மாறாக அப்போது இணைத்தலைமை நாடுகளாகச் செயற்பட்ட மேற்குறிப்பிட்ட நாடுகளையும் ஐக்கிய நாடுகள் சபையையும் நம்பியே எமது உறவுகளை இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்திருந்தோம். ஆகவே பொறுப்புக்கூறும் கடப்பாடு இலங்கை அரசாங்கத்தையும் கடந்து ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட இணைத்தலைமை நாடுகளுக்கும் உண்டு என்பதையும் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் வலியுறுத்திக் கூறியிருந்தார்.

அத்தோடு, இலங்கையில் நடைமுறையில் இருக்கும் பலவீனமான உள்நாட்டு நீதி பொறிமுறைக்குள் எந்தவிடயத்திற்கும் உரிய நீதியை எதிர்பார்க்க முடியாது. அதனால் சுதந்திர சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றின் மூலமே எமக்கான நீதியை உறுதிசெய்ய முடியுமென தாம் நம்புவதாகவும் எடுத்துச் சொல்லியிருந்தார். இவைதவிர திட்டமிட்ட சிங்களக் குடியேற்றத்தினால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகளையும் எமது மக்கள் சந்தித்துவரும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் விளக்கிக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவற்றை செவிமடுத்த மனித உரிமைகள் கண்காணிப்பக பிரதிநிதிகள் காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் பொறுப்புக்கூறப்பட்டால் உங்கள் போராட்டம் முடிவுக்கு வந்துவிடும்தானே என அவர்கள் வினவிய போது, இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமலாக்கப்பட்டவர்களது விடயத்தில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபை, இந்தியா மற்றும் இணைத்தலைமை நாடுகள் கட்டாயம் பொறுப்புகூறியே ஆகவேண்டும். இவ்விடயத்திற்கு உரிய நீதி கிடைக்கவில்லையெனில் எம்மோடு இப்போராட்டம் நின்றுவிடாது. எமது அடுத்த தலைமுறைப் பிள்ளைகள் பல்வேறு வழிகளில் தமது ஆற்றல்களை வளர்த்துக்கொண்டு வருகின்றார்கள். நிச்சயம் அவர்களும் காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள தொடர்ந்து போராடுவார்கள் என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்கள் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சட்ட மற்றும் கொள்கை இயக்குநர் James Ross தலைமையில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அவுஸ்ரேலிய இயக்குநர் Elaine Pearson மற்றும் ஜப்பான் இயக்குநர் Kanae Doi ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார்கள். இச்சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்றிருந்தது.

Leave a comment