சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்கள் – சட்ட மா அதிபர்

290 0

சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் மாத்தறை பச்கொட பகுதியில் தமிழ் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகள் பயன்பெறுவதற்கு சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புக்களை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சட்ட மா அதிபர் உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.

தங்களுடைய குழந்தைகளுக்காக தமிழ் பாடசாலை ஒன்றை நிறுவுவதற்கு அரசுக்கு உத்தரவிட கோரி அப்பகுதி தோட்ட தொழிலாளர்கள் சிலர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துகொண்டபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பச்கொட பகுதியில் தமிழ் பாடசாலை எதுவும் இல்லாததால் தங்களுடைய குழந்தைகளுக்கு சிங்கள மொழியில் கல்வி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக இந்த மனுவை தாக்கல் செய்த தோட்ட தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.

தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து 40 கிலோ மீட்டருக்கு அப்பால் தமிழ் பாடசாலை ஒன்று அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள மனுதாரர்கள், தங்களுடைய குழந்தைகளை அங்குபடிக்க அனுப்பவது மிக கடினமானது என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, இலங்கை அரசியல் சாசனத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள மொழிகள் தொடர்ப்பான தங்களது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் தாங்கள் வசிக்கும் பகுதியில் தமிழ் மொழி பாடசாலை ஒன்றை நிறுவும்படியும் அரசுக்கு உத்தரவிட கோரி அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது. கருத்து தெரிவித்த அரசுதரப்பு வழக்கறிஞர் இந்த பகுதியில் வசிக்கும் தோட்ட தொழிலாளர்களுக்கு தமிழ் பாடசாலை எதுவும் இல்லாததால், அவர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதியை தாங்கள் ஏற்றுக்கொள்வதாக கூறினார்.

ஆனால் திடீரென பாடசாலை தொடங்குவது நடைமுறை சாத்தியமற்றது என்று கூறிய அரசு தரப்பு வழக்கறிஞர், அப்பகுதியில் இருக்கின்ற சிங்கள பாடசாலைகளில் தமிழ் மொழி வகுப்புகளை ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

இதன் மூலம் தோட்ட தொழிலாளர்களின் குழந்தைகளும் தமிழில் கல்வி பயில முடியும் என்று கூறியுள்ளார்.
இந்த கருத்தை தாங்கள் வரவேற்பதாக மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை நடைமுறை படுத்துவதற்கு அரசு தரப்புக்கு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் அதன் முன்னேற்றங்களை எதிர்வரும் நவம்பர் மாதம் 17 தேதி நீதிமன்றத்தில் அறிவிக்க வேண்டுமென்று உத்தரவிட்டுள்ளார்

Leave a comment