ரோஹிங்கியா அகதிகளை வில்பத்துவில் குடியேற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் திட்டம் ஒரு போதும் நடைமுறை சாத்தியமாகாது என பாராளுமன்ற உறுப்பினரும் பிவிதுறு ஹெல உறுமய கட்சியின் தலைவருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார் .
கொழும்பில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திதிப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த சந்திப்பில் அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
சிவாஜிலிங்கம் சமஷ்டி முறை ஏற்படுத்தப்பட்டு வட மாகாண சபை தனித்து இயங்குகின்றது என்ற எண்ணத்தில் செயற்படுகின்றார்.
முன்மொழியப்பட்ட சமஷ்டி முறைமை இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்பது மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்திற்கு இன்னும் தெரியவில்லை.
அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கவில்லை எனினும் இரண்டரை வருடங்கள் கடந்துள்ளதால் சமஷ்டி முறை உருவாக்கப்பட்டுள்ளதாக நினைப்பதோடு, வட மாகாண சபை வேறு ஒரு கொடியுடன், ஒரு தனி நாடாக இயங்குவதாக நினைத்துக்கொண்டு அகதிகள் விடயத்தில் தம்மால் தலையிட முடியுமென அவர் நினைக்கின்றார்.
எனினும் ஜனாதிபதியும், பிரதமரும் உறுதியளித்த சமஷ்டி முறைமை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதை அவருக்கு ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். நாம் இருக்கும் வரை சமஷ்டி யாப்பு ஒன்றை உருவாக்க இடமளிக்கப்போவதும் இல்லை.
அவ்வாறு அவரது நோக்கம் நிறைவேறினாலும் அதனை இந்த மண்ணில் நடைமுறைப்படுத்த நாம் அனுமதிக்கப்போவதும் இல்லை. ரோஹிங்கியா முஸ்லிம்களை வில்பத்துவில் குடியேற்றும் சிவாஜியின் கனவு மெய்ப்படபோவதும் இல்லை.“ எனக் குறிப்பிட்டார்.
இலங்கையில் பௌத்தர்களுக்கு எதிரான பிரிவினைவாத முஸ்லிம்கள் சிலர் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில், அதே மனநிலையுடன் இருக்கும் ரோஹிங்கியா முஷ்லிம்களை நாட்டிற்குள் அனுமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் அவர் இந்த ஊடக சந்திப்பில் அவர் வலியுறுத்தினார்.
“ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் இந்த நாட்டு சிங்கள பௌத்த மக்களின் மனதை பாதித்த பல விடயங்கள் காணப்படுகின்றன. ரோஹிங்கியா முஸ்லிம்கள் பௌத்த மகா சங்கத்துடன் முரண்பட்டுக்கொண்டு, பௌத்த பெண்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர்கள். அவர்கள் காவி உடையுடன் வைராக்கியத்துடனேயே இந்த நாட்டை வந்தடைந்துள்ளனர்.
அதேவேளை, இந்த நாட்டின் பிரிவினைவாத முஸ்லிம்கள் சிலர் பௌத்த புராதன சின்னங்களை சேதப்படுத்தியுள்ளனர். புத்தரின் சிலைகளை உடைத்தெரிந்தவர்கள் இருக்கின்றனர். அவர்கள் பௌத்தர்களுக்கு எதிராக செயற்படுகின்றனர். இவர்களின் செயற்பாடுகள் தொடர்கின்ற இவ்வாறான ஒரு சூழலில் அந்த மனநிலையை ஒத்தவர்கள் இந்த நாட்டை வந்தடைவது தொடர்பில் முஸ்லிம் சிங்கள மக்களிடம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் கரிசனைகொள்ள வேண்டும்.
பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் ஒரு தரப்பு அவர்களுக்கு உதவ வேண்டுமென கோருகின்ற நிலையில், ஒரு தரப்பு ரோஹிங்கியா முஸ்லிம்கள் இந்த நாட்டில் இல்லையெனக் கூறுகின்றது. எனினும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அரசாங்கம் பொய்யுரைப்பதாக மக்கள் எண்ணக்கூடும். ஒரு பௌத்த பிக்கு வெட்டி படுகொலை செய்யப்படுவதை மற்றுமொரு பிக்கு பார்த்துக்கொண்டிருக்க முடியாது. ஆகவே அவர்கள் கிளர்ந்தெழுவதை தடுக்க முடியாது. கைது செய்யப்பட வேண்டியது பௌத்த பிக்குகளை அல்ல இந்த நாட்டு மக்களுக்கு பொய்யான தகவல்களை வழங்கிய அமைச்சர்களையே“என அவர் மேலும் தெரிவித்தார்.