கியூபா தூதரக ஊழியர்களில் 60 சதவீதம் குறைக்க வலியுறுத்தும் அமெரிக்கா

559 0

வாஷிங்டனில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் 60 சதவீத ஊழியர்களை திரும்ப பெறும்படி வலியுறுத்த அமெரிக்க அரசு தயாராகி வருகிறது.

அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வந்த பகைமையானது ஒபாமா ஆட்சிக்காலத்தில் முடிவுக்கு வந்தது. ஒபாமா மேற்கொண்ட முயற்சியின் காரணமாக, இருநாடுகளுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் தூதரகங்கள் திறக்கப்பட்டன. சமீபகாலமாக கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களில் சிலர் காது கேளாமை, மூளை பாதிப்பு உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது கியூபா அரசின் மறைமுக தாக்குதல் என அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது. அத்துடன், கியூபாவில் உள்ள தூதரகத்தை மூடவும் முடிவு செய்தது. தங்கள் மீதான குற்றச்சாட்டை கியூபா மறுத்துள்ளது. இதனால் இரு நாடுகளுக்குமிடையிலான உறவில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள கியூபா தூதரகத்தில் பணியாற்றும் ஊழியர்களை குறைக்கவும் அமெரிக்கா முடிவு செய்துள்ளது. கியூபா தூதரக ஊழியர்களில் 60 சதவீத ஊழியர்களை திரும்ப பெறும்படி கேட்டுக்கொள்ள டிரம்ப் நிர்வாகம் தயாராகி வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை அமெரிக்க வெளியுறவுத்துறை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் தொடர்பாக அதிபர் டிரம்புடன் வெளியுறவுத்துறை மந்திரி டில்லர்சன் ஆலோசனை நடத்தியுள்ளார். கியூபா தூதரக ஊழியர்களை திரும்ப பெறும்படி கியூபாவிடம் அமெரிக்க அரசு முறைப்படி கேட்டுக்கொள்ளும். கட்டாயப்படுத்தி வெளியேற்ற மாட்டோம் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Leave a comment