தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்கும் சட்டத்தை நீக்க அரசுக்கு பரிந்துரை

563 0

201608211029132072_Legal-experts-favour-abolition-of-law-against-suicide_SECVPFமனவிரக்தியால் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்படும் நபர்களுக்கு தண்டனை வழங்கும் வெள்ளையர் காலத்து சட்டத்தை நீக்க மத்திய அரசுக்கு சட்டத்துறை வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.மனவிரக்தியால் தற்கொலைக்கு முயன்று பின்னர் காப்பாற்றப்படும் நபர்களுக்கு தண்டனை வழங்கும் வெள்ளையர் காலத்து சட்டத்தை நீக்க மத்திய அரசுக்கு சட்டத்துறை வல்லுனர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

வெள்ளையர்கள் நம்நாட்டை ஆண்டபோது இயற்றப்பட்டு, தற்போது நடைமுறைபடுத்தப்படாமல் காலாவதியாகிப் போன சட்டங்களை நீக்கும் நடைமுறையை பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இதன்படி, சாமானிய மக்களுக்கும், நீதித்துறைக்கும், அரசுக்கும் தடைக்கல்லாக இருந்த 1000-க்கும் மேற்பட்ட காலாவதியான சட்டங்கள் சட்ட புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், 1,741 சட்டங்களை நீக்க அடையாளம் காணப்பட்டுள்ளன.

இவற்றில் மிக முக்கியமாக தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்கும் வெள்ளையர் காலத்து சட்டத்தை நீக்க மத்திய அரசுக்கு அதிகமான பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

1860-ம் ஆண்டில் இயற்றப்பட்ட இந்திய தண்டனை சட்டம் குற்றப்பிரிவு எண்: 309-ல் காணப்படும் தற்கொலைக்கு முயன்ற குற்றத்துக்காக ஒருவருக்கு தண்டனை வழங்கும் சட்டத்தின்கீழ் கடந்த 156 ஆண்டுகளாக இதுவரை யாருக்கும் தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிகிறது.

முற்காலத்தில் தற்கொலை என்பது வெகு அபூர்வமாக இருந்தபோது இத்தகைய சட்டம் இயற்றப்பட்டிருக்கலாம். குறிப்பாக, தற்காலத்தில் அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் வாழ்ந்து வருபவர்களில் வெகுசிலர் தற்கொலைக்கு முயல்வது சர்வசாதாரணமாகி விட்ட நிலையில் வாழ முடியாமல் தனது வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவெடுப்பவர்களை தண்டிப்பதில் நியாயமில்லை என சிலர் பரிந்துரைத்துள்ளனர்.

ஒருவர் தனது வாழ்க்கையில் மிகவும் பாதிக்கப்படும் நிலையில் சில நொடிகளில் மனோதிடம் குலைந்து தற்கொலைக்கு முயல்வதால், இதை கிரிமினல் குற்றமாக கருதி, அவர்களுக்கு தண்டனை வழங்குவது முறையல்ல என சட்ட வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கண்ணியத்தோடு வாழ்வதற்கு அரசியலமைப்பு சட்டம் அனுமதியளித்துள்ள நிலையில், நிலைமை தவறும்போது அதே கண்ணியத்துடன் தங்களது வாழ்க்கையை முடித்துகொள்ளும் உரிமை ஒருவருக்கு உண்டு. இதை தண்டனைக்குரிய கிரிமினல் சட்டத்தின் மூலம் கையாள்வது சரியல்ல என்றும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.