“25 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் என்னை விடுதலை செய்ய வேண்டும்” என தேசிய மகளிர் ஆணையத்துக்கு நளினி புதிய மனு ஒன்றை அனுப்பி உள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி, அவரது கணவர் முருகன் ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். வேலூர் பெண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள நளினியை அவரது வக்கீல் புகழேந்தி நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு ½ மணி நேரம் நடந்தது. பின்னர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த வக்கீல் புகழேந்தி, நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான நளினி 25 ஆண்டுகளாக ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார். அவர் தன்னை ஜெயிலில் இருந்து விடுதலை செய்யக்கோரி தேசிய மகளிர் ஆணையத்துக்கு புதிய விண்ணப்ப மனு ஒன்றை சிறை கண்காணிப்பாளர் ராஜலட்சுமி வாயிலாக அனுப்பி உள்ளார். அந்த விண்ணப்ப மனுவில் அவர், “நான் 25 ஆண்டுகளாக ஜெயிலில் தண்டனை பெற்று வருகிறேன். எனக்கு பிறகு இந்த ஜெயிலில் அடைக்கப்பட்ட கைதிகள் 2 ஆயிரத்து 200 பேர் பல்வேறு கட்டங்களில் விடுதலை செய்யப்பட்டு உள்ளனர். நானும் விடுதலை ஆவேன் என்று நம்பி இருந்தேன். ஆனால் இன்னமும் நான் ஜெயிலில் இருக்கிறேன்.
இதனால் நான் உடல் அளவிலும், மனதளவிலும் பாதிக்கப்பட்டு உள்ளேன். கர்ப்பிணியாக இருந்தபோது நான் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். ஜெயிலில் எனக்கு பெண் குழந்தை பிறந்தது. எனது மகள் இப்போது திருமண வயதை அடைந்து விட்டாள். அவளுக்கு வயது முதிர்வு அடைவதற்குள் திருமணம் செய்ய வேண்டும் என்பன உள்பட பல கடமைகள் எனக்கு உள்ளது. அவள் வெளிநாட்டில் வசித்து வருகிறாள். விடுதலை குறித்து தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தது. ஆனால் அவை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளன.
எனது விடுதலை குறித்து கடைசி நம்பிக்கையை உங்களிடம் தான் வைத்துள்ளேன். அரசியலமைப்பு பிரிவின் 72-வது பிரிவை பயன்படுத்தி என்னை விடுதலை செய்ய வேண்டும்” என்று நளினி கூறி உள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த தகவலை தெரிவித்த வக்கீல் புகழேந்தி மேலும் கூறுகையில், “கடந்த 2000-வது ஆண்டில் நளினி தேசிய மகளிர் ஆணையத்திற்கு இது போன்று ஒரு விண்ணப்பம் அனுப்பியதன் காரணமாக அவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. எனவே அவர் இப்போதும் தேசிய மகளிர் ஆணையத்துக்கு 16 ஆண்டுகள் கழித்து, தன்னை விடுதலை செய்யக்கோரி புதிய விண்ணப்ப மனு அனுப்பி உள்ளது அவரது விடுதலைக்கு உதவும் என்று எதிர்பார்க்கிறோம்” என்றார்.