அழிவின் விளிம்பில் முல்லைத்தீவு மக்கள்; காப்பாற்றப் போவது யார்? – வன்னிமகள்

436 0

தமிழர் தாயகத்தின் வடமாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது. ஸ்ரீலங்காவில் மிகவும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லை மாவட்டமானது இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகளவான சொத்தழிவுகளையும், உயிரிழப்புக்களையும் சந்தித்தது.

இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அப்பாவி பொதுமக்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஓரம்கட்டப்பட்டு கொன்றொழிக்கப்பட்டதுடன், எஞ்சியவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டு பகுதி என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு திறந்தவெளி சிறைச்சாலைகளான முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இதன் பின்னர் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டம் கட்டமாக குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் அவர்களது சொந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டனர்.

யுத்தத்தில் அனைத்தையும் இழந்த நிலையில் சொந்த இடத்திற்கு சென்றால் நிம்மதியாக வாழலாம் என்ற பேராசையுடன் மீள வந்த மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்று பேரதிர்ச்சியே காத்திருந்தது.

மக்களது பூர்வீக நிலங்கள் உட்பட விவசாய நிலங்களும் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் அபகரிக்கப்பட்டிருந்தன. காணி உரிமையாளர்களான மக்கள் மாதிரிக்கிராமம் என்ற பெயரில் அரச காணிகளில் மீண்டும் தறப்பாள் கொட்டகைகளில் குடியேற்றப்பட்டனர். மீண்டும் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது சொந்தக் காணிகளைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க இந்த மக்களது பிரதான பொருளாதார தொழில்களாக விவசாயம், மீன்பிடி என்பன காணப்படுவதுடன் கால்நடை வளர்ப்பு, காடுவளர்ப்பு என்பனவும் காணப்படுகின்றன. இங்கு வசிக்கும் மக்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டுக் காணப்படுகின்றனர்.

எனினும் விசாயத்தையும் மீன்பிடியையம் பிரதான வாழ்வாதார தொழிலாக கொண்டுள்ள மக்கள், நிரந்தர தொழில் புரிய முடியாத நிலைக்கு தற்போது தள்ளப்பட்டுள்ளனர். கொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல்நீரேரிகளையும் தன்னகத்தே கொண்ட முல்லை மாவட்டத்தின் நில உயரமானது கடல் மட்டத்திலிருந்து 36 தசம் 5 மீற்றர் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது.

மாவட்டத்தின் 70 கிலோமீற்றர் நீளமான வளமான கடற்கரை படுக்கையும் ஏரிகளும் மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்ததாக காணப்படுகின்றன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்திபெற்றவையாகும். பெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித் தொழில் காணப்படுவதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவுகின்றது.
யுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களாக இடம்பெற்ற இடப்பெயர்வு என முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும், குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், யுத்தத்துக்குப் பின்னரும், அவர்களுக்கு இழப்பு என்பது தொடர்கதையாகவே தொடர்கின்றது.

முன்னர் ஆட்சியிலிருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம், மீன்பிடித்தலுக்கு, இராணுவ ரீதியான தடைகளை விதித்ததுடன் கண்காணிப்பு என்ற பெயரில் மீனவர்களது சுதந்திரமான தொழிலுக்கு தடைவிதித்திருந்தது.

இதன் பின்னர் கடந்த இரண்டு வருடங்களுக்கு மைத்திரி – ரணில் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிக்கு வந்த காலம் முதல் அவர்களது பொருளாதாரம் மேலும் கீழ்நிலைப்பட்டது.
அவர்களது மீன்பிடி வாழ்வாதாரம் நாட்டின் வேறு பகுதிகளிலிருந்து பெருமளவில் வந்த படகுகளால் சிதைக்கப்பட்டது. நிலைத்திருக்கக்கூடிய உள்ளூர் மீன்பிடித் தொழிலை விருத்தியாக்கும் பொறுப்பையுடைய மீன்பிடி அமைச்சு இது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்த போதிலும் குறித்த பிரச்சனை தீர்வின்றி தொடர்கின்றது.

இவை ஒருபுறம் இருக்க விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் முன்னொரு காலத்தில் விவசாயம் செழிப்படைந்து காணப்பட்டது.

எனினும் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையுடன் ஆரம்பித்த அழிவு இன்று வரை தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. விவசாய நிலங்களாக காணப்பட்ட பகுதிகள் தரிசு நிலங்களாக மாற்றமடைந்துள்ளன. மாற்றியமைக்கப்பட்டுள்ளன. இது மாத்திரமன்றி ஏக்கர் கணக்கிலான விவசாய நிலங்களை அபகரித்துள்ள ஸ்ரீலங்கா இராணுவம்இ அதில் முகாம்களை அமைத்துள்ளதுடன் தமது தேவைக்கான விவசாய செய்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்காரணமாக அன்றாட உணவுத் தேவையைக் கூட கொண்டு நடத்த முடியாது அல்லலறும் விவசாயிகள் உட்பட பொதுமக்கள், வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது பிறரிடம் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இம் மாவட்டத்தில் காட்டுநிலம், பற்றைக்காணிகள், தெங்குப்பயிர் நிலங்கள், விவசாயநிலங்கள், நீர்நிலைகள் என்பனவற்றை உள்ளடக்கியதாக மாவட்டத்தின் காணிப்பயன்பாடு 2 இலட்சத்து 51 ஆயிரத்து 690 ஹெக்டேயர் பரப்பைக் கொண்ட பகுதியில் அனைத்து வகையான பொருளாதார வளங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.

இவற்றில் காட்டுப்பகுதி 167,850 கெக்டேயராக மாவட்டத்தில் 64 தசம் 1 வீதத்தைக் கொண்டுள்ளது. நீர்நிலைகளும் தரவைக்காணியும் 21 ஆயிரத்து 390 ஹெக்டேயராக 5.2 வீதத்தைக் கொண்டுள்ளது. விவசாய நிலமாக 44 ஆயிரத்து 40 கெக்டேயராக மாவட்டத்தில் 5 தசம் 1 வீதத்தைக் கொண்டுள்ளதுடன் ஏனையவை மக்கள் வசிப்பிடங்களாக காணப்படுகின்றன.

இம் மாவட்டத்தில் விவசாயம் பிரதான வருமானத்தை ஈட்டித்தரும் தொழிலாக காணப்படுகின்றது. மொத்தமாக 80% விவசாயத்தில் தங்கியுள்ளனர். நெற்செய்கைக்கு சாதகமான 16,737 ஏக்கர் நிலத்தை இம் மாவட்டம் கொண்டுள்ளது. 3 பெரிய குளங்களும் 16 நடுத்தர அளவிலான குளங்களும் 7,109 ஏக்கர் பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுவதுடன் 220 சிறிய குளங்கள் 11,749 பெரிய நெற்காணிகளிற்கு நீர்பாய்ச்சுகின்றன.

இம் மாவட்டம் விவசாய அபிவிருத்திக்கு பயன்படக்கூடிய நீர்வளங்களைக் கொண்டுள்ளது. நீர்ப்பாசன பயிர்ச்செய்கைக்கு கிளை பரப்பக்கூடிய நிலையாகப் பாய்கின்ற நதியெதுவும் காணப்படவில்லை. இம் மாவட்டத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 16 நடுத்தர குளங்களும் 198 சிறிய நீர்ப்பாசனக் குளங்களும் காணப்படுகின்றன. மழைநீரே விவசாயத்திற்கான பிரதான நீர்வளமாகும்.

யுத்தத்தின் இறுதிக்கட்டப் பேரழிவு, சுனாமி, பல தசாப்தங்களான இடப்பெயர்வு என, முல்லைத்தீவு மீனவ சமுதாயம், பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்திலும்இ குறைந்தபட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன. இருப்பினும், யுத்தத்துக்குப் பின்னரும், அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கவில்லை.

இவை மாத்திரமன்றி முல்லைத்தீவின் பிரதான வளமாக விளங்கிய காடுகளை அழித்து அங்கு குடியேற்றங்களை உருவாக்கும் செயற்பாடும் மும்முரமாக இடம்பெற்றுவருகின்றது.
இவற்றுடன் கூடியதாக முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியிலுள்ள தமிழ் மக்களின் காணிகளை அபகரிக்கும் செயற்திட்டமொன்று பெரும் எடுப்பில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அண்மையில் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழர்கள் இன, மொழி, பொருளாதாரம், அரசியல் எல்லாவற்றிலும் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்காக போராடவும் ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களது போராட்டம் அதிகார தரப்பிற்கும், ஒடுக்குபவர்களுக்கும் எதிராகவே இருக்கின்றது. அவர்கள் யாராக இருந்தாலும் சரி, காணமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அரசாங்கத்திற்கெதிராக போராடுகிறார்கள், கேப்பாபுலவில் இராணுவத்திற்கெதிராக போராடினார்கள்.

அரசியல் தலைவர்களால் பேசப் பயந்த விடயங்களை மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் பேச 7 ஆரம்பித்துவிட்டனர். தமிழ் தலைவர்களால் தீர்வு கிடைக்காத பிரச்சினைக்கு மக்கள் போராடி தீர்வு பெற்றனர்.

அது போலதான் தமது இனப்பரம்பலை சிதைக்கும் செயற்பாட்டிற்கெதிராகவும் தமது வளங்களைப் பாதுகாப்பதற்காகவும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நாட்டிலே தமிழ் மக்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கின்ற விடயங்களே அதிகம் நடந்தேறிக் கொண்டிருக்கிறது அவற்றையெல்லாம் உரிமைக்காக போராடிய இனம் எத்தனை காலம் அமைதியாக பார்த்துக்கொண்டேயிருக்கும்?

போராட்டமே வாழ்வாகிப் போன முல்லைத்தீவு மக்கள் மீண்டும் மீண்டும் தெரிவிப்பது தீர்வு கிடைக்கம் வரை பீனிக்ஸ் பறவைகள் போன்று மீண்டெழுவோம் என்பதையே.

Leave a comment