காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை நடத்திய மெக்ஸவெல் பரணகமவின் தலைமையிலான குழுவினர், தமது இறுதியறிக்கையில் உள்ளக பொறிமுறைக்கான இரண்டு பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
சிறப்பு நீதிமன்றம் மற்றும் உண்மையை கண்டறியும் குழு என்பனவே அவையாகும் என்று ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்தக்குழுக்கள், மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்கள் தொடர்பிலான விடயங்கள் ஆராயும் என்று பரணகம குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.
இதன்படி குற்றவியல் குற்றங்களுக்கு உள்ளானவர்கள் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக இனங்காணப்படாவிட்டால், அவர்கள் உண்மையை கண்டறியும் குழுவில் முன்னிலையாகவேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் மூன்று பேர் அடங்கிய இந்த ஆணைக்குழுவினர், கடந்த மாதம், ஜனாதிபதியிடம் தமது அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதேவேளை காணாமல் போனோர் என்று உறுதிப்படுத்தப்படும் ஒருவருக்காக அவரின் குடும்பத்துக்கு 5இலட்சம் ரூபா வரையில் நட்டஈடு வழங்கப்படவேண்டும்.
அந்தக்குடும்பத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மாத்திரமல்லாமல், மனவள ஆலோசனைகளும் வழங்கப்படவேண்டும் என்று குழுவினர் பரிந்துரைத்துள்ளனர்.