அனைத்து தரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் முரண்பாடுகளைத் தீர்த்து சிறந்த ஒரு அரசியல் அமைப்பை உருவாக்க முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி தயாரிக்கப்படும் ஒரு அரசியல் யாப்புக்கு பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் பொதுமக்கள் கருத்துக்கணிப்பும் எடுக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன தெரிவித்தார்.
பிளவுபடாத நாட்டிற்குள் அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பதன் மூலம் நாட்டின் ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் ஆட்புல இறைமை ஆகியவற்றிற்கு எதுவித பாதிப்பும் ஏற்படாது என சுட்டிக்காட்டிய கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன அரசியலமைப்பு குழுவினால் வெளியிடப்பட்ட உத்தேச புதிய அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கை தொடர்பாக மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
சமகாலத்தில் இலங்கையில் காணப்படும் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகளுக்குத் தீர்வை பெற்றுக்கொள்வதற்கு மிகவும் திருத்தமான ஒரு சூழலை ஏற்படுத்த சிறந்த சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
புத்த சமயம் அரச சமயமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்ற கருத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும், இது தொடர்பில் சில தரப்பினர் பொய்யான வதந்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதற்கு முயற்சித்துவருவதாகத் தெரிவித்தார்.