கிளிநொச்சி மாவட்டம் முழக்காவில் பகுதியில் அமைந்துள்ள மரமுந்திரிகைத் தோட்டத்திற்கான 500 ஏக்கர் காணியினை பொதுப் பயன்பாட்டுக்கு வழங்குவதாக இருந்தால் கடந்த 7 வருடங்களாக தாம் அதற்குச் செலவளித்த பணத்தினை மீண்டும் தரவேண்டும் என இராணுவம் தெரிவித்துள்ளது.
படையினர் வசமுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பாக கடந்த திங்கட்கிழமை இராணுவ முகாமில் சந்திப்பொன்று நடைபெற்றது. அதில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், மாவட்டச் செயலாளர் மற்றும் பிரதேச செயலர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இச்சந்திப்பின்போது, முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள 500 ஏக்கர் மரமுந்திரிகைப் பயிர்ச் செய்கைக்கான காணி விடுவிப்புத் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அந்தத் தோட்டத்தினை விடுவதற்கு நாம் சம்மதிக்கின்றோம். 2010ஆம் ஆண்டிலிருந்து அந்தத் தோட்டத்தைப் பராமரிப்பதற்கு நாங்கள் பெருந்தொகைப் பணத்தினைச் செலவுசெய்துள்ளோம்.
நாம் செலவு செய்த பணத்தினை மீளத் தரும்பட்சத்தில் நாம் உடனடியாக தோட்டத்தினை ஒப்படைப்போம் என அந்த முகாம் அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்தச் சந்திப்பில் கிளிநொச்சி மாவட்டத்தில் படையினர் வசமுள்ள வட்டக்கச்சியில் உள்ள 419 ஏக்கர் பண்ணை, அக்கராயனிலுள்ள 80 ஏக்கர் கரும்புத் தோட்டம், மலையாளபுரம், கண்டாவளை உள்ளிட்ட நிலங்கள் விடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.