புதிய கவர்னரிடம், அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வழங்குவது குறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு செய்வோம் என திருநாவுக்கரசர் கூறி உள்ளார்.
நடிகர் சிவாஜி கணேசனின் 90-வது பிறந்த நாளையொட்டி, சென்னை சத்தியமூர்த்தி பவனில், அவரது உருவபடத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
விழாவில், தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் குமரிஅனந்தன், துணைத்தலைவர் எச்.வசந்தகுமார், மகிளா காங்கிரஸ் தலைவர் ஜான்சிராணி, தமிழ்நாடு காங்கிரஸ் கலைப்பிரிவு தலைவர் கே.சந்திரசேகரன், கலைப்பிரிவு செயலாளர் கே.முருகேசன், கலைப்பிரிவு சென்னை கிழக்கு மாவட்ட தலைவர் ஜி.பிரபு மற்றும் எஸ்.கே.அகமது அலி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா முடிவில், திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவாஜி கணேசன் சிலையை தி.மு.க. தலைவர் கருணாநிதி திறந்து வைத்தார். கோர்ட்டு உத்தரவுப்படி சிலை அகற்றப்பட்டபோது, மீண்டும் மெரினா கடற்கரையில் நிறுவப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தோம்.
ஆனால், அவரது சிலை அடையாறில் மணிமண்டபம் அருகில் வைக்கப்பட்டுள்ளது. சிவாஜி கணேசன் சிலையில் உள்ள கல்வெட்டில், கருணாநிதியின் பெயரை அகற்றி எடுப்பது என்பது மிகவும் சிறுபிள்ளைத் தனமாக உள்ளது.
தமிழகத்தின் புதிய கவர்னர் ஏராளமான சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. பெரும்பான்மை இல்லாத சட்டமன்றம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் ஊழல் பெருகி வருகிறது. விவசாயிகள் கடன் ரத்து செய்யப்படவில்லை. பயிர் காப்பீடு பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலால் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இது போன்ற சவால்களை கவர்னர் சந்திக்க வேண்டி உள்ளது.
ஜி.எஸ்.டி. வரியால் சிறு, குறு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பணத்தை சுரண்டி பெரும் பண முதலைகளுக்கு வழங்குவதாக பா.ஜ.க.வை சேர்ந்த சுப்பிரமணியசாமி மற்றும் குருமூர்த்தி ஆகியோர் கூறுகின்றனர். ஜி.எஸ்.டி. வந்த பிறகு, சினிமாவுக்கு மீண்டும் கேளிக்கை வரி விதிப்பதால் சினிமாத்துறை பெரும் பாதிப்படையும்.
புதிய கவர்னரிடமும், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை வழங்குவது குறித்து தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் பேசி முடிவு எடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.