சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா?: எடப்பாடி பழனிசாமிக்கு மு.க.ஸ்டாலின் கேள்வி

326 0

18 எம்.எல்.ஏ.க்களை நீக்கியதை ரத்து செய்து விட்டு சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபிக்க தயாரா? என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி கேசினோ சந்திப்பில் உள்ள மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் அறிஞர் அண்ணாவின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இந்த சிலையின் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா சிலையை திறந்து வைத்தார். மேலும் அங்கு நூலகத்தையும் அவர் திறந்து வைத்து பார்வையிட்டார்.

அதன்பின்னர் ஊட்டி ஏ.டி.சி. திடலில் தி.மு.க. பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசும் போது கூறியதாவது:-

தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் ஆட்சி மீது மக்கள் அளவு கடந்த கோபத்தில் இருக்கிறார்கள்.

ஆட்சியில் இருக்கிற கோபத்தை விட எங்கள் மீது தான் கோபத்தில் உள்ளனர். இன்னும் இந்த ஆட்சியை கலைக்காமல், கவிழ்க்காமல் உள்ளர்களே என்பது தான் அந்த கோபம். தமிழக மக்கள் கொதிப்பாகவும், கொந்தளிப்பாகவும் உள்ளனர்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அடிக்கடி வந்த கோடநாடு இங்கு தான் உள்ளது. கோடநாட்டில் ஓய்வெடுத்து வந்த ஜெயலலிதாவின் மரணம் மர்மமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இந்த மரணம் எப்படி ஏற்பட்டது என்று விடை காண முடியாத நிலையில், கல்லறையில் இருக்கும் ஜெயலலிதாவுக்கு இன்னும் ஓய்வு கிடைக்கவில்லை.

பலர் அங்கு சென்று தியானம் செய்வதையும், சமாதியை ஓங்கி அடிக்கும் காட்சியையும் காண்கிறோம். பாரதிராஜா இயக்கிய முதல் மரியாதை படத்தில் நடிகர் சாமிக்கண்ணு அடிக்கடி சொல்லும் வசனம் ‘எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்’. அதுபோல் மேடையில் இருக்கும் எங்களுக்கும், மக்களுக்கும் ஒரு உண்மை தெரிஞ்சாகணும். ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான உண்மை தெரிஞ்சாகணும்.

இப்போது தனிநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் முன்பு கூறும்போது, விசாரணை கமிஷன் அமைத்தால் முதலில் விசாரிக்கப்படும் நபர் ஓ.பன்னீர்செல்வம் என்று சொன்னாரா இல்லையா?.

ஓ.பன்னீர்செல்வம் இதற்கு ஒரு விளக்கம் அளித்தார். விசாரணைக்கு நாங்கள் தயார் என்று கூறியதோடு, முதல் குற்றவாளி அமைச்சர் விஜயபாஸ்கர் தான் என்றும் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். மாறி மாறி குற்றம் சாட்டிய அவர்கள் இப்போது ஒரே அமைச்சரவையில் உள்ளனர். இதைவிட வெட்கம், மானம், சூடு, சொரணை இந்த அரசுக்கு இருக்கிறதா?.

பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மூன்று முறை ஜெயலலிதாவை பார்த்துவிட்டு வந்ததாக கூறினார். ஆனால் 2 நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார், கவர்னர் எல்லாம் ஜெயலலிதாவை பார்க்கவில்லை என்று கூறுகிறார்.

இதுகுறித்து கவர்னர் மாளிகையில் இருந்து விளக்கம் வந்துள்ளதா?. கவர்னர் குறித்து விசாரித்தால் உண்மை வெளிப்பட்டு விடும் என்பதற்காக கவர்னரை மாற்றிவிட்டு புதிய கவர்னரை நியமித்துள்ளனர்.

ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அவரது மரணத்துக்கு பிறகு ஒரு அசாதாரண சூழ்நிலை உள்ளது. அதுவரை தமிழ்நாட்டுக்கு நிரந்தர கவர்னரை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு எண்ணம் இல்லாமல் இருந்தது. இப்போது விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டு உள்ளது. அமைச்சரே கவர்னர் சொன்னது பொய் என்று கூறியிருக்கிறார். இந்த நிலையில் கவர்னர் சிக்கி விடுவார் போலிருக்கிறது, சிக்கினால் மத்திய அரசுக்கு ஆபத்தாகி விடும். அதனால் முதலில் கவர்னரை மாற்று என்று மாற்றி உள்ளனர். இதுதான் உண்மை.

18 எம்.எல்.ஏ.க்கள் உங்களிடம் இருந்து சென்று விட்டனர். உங்களை மாற்ற வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். உங்களுக்கு தைரியம் இருந்தால், இந்த ஆட்சி மெஜாரிட்டி ஆட்சி என்று நீங்கள் சொல்வதை நாங்கள் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று சொன்னால் 18 எம்.எல். ஏ.க்களை நீக்கிய உத்தரவை ரத்து செய்துவிட்டு, சட்டமன்றத்தை கூட்டி மெஜாரிட்டியை நிரூபியுங்கள். இது முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் முடியுமா?. இதற்கு நீங்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

சட்டமன்றத்தை கவர்னர் கூட்டாத காரணத்தினால், ஐகோர்ட்டை நாம் அணுகி இருக்கிறோம். வருகிற 4-ந் தேதி மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. 4-ந் தேதியை எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இன்னும் 2 நாட்கள் பொறுங்கள். தமிழ்நாட்டு மக்களே மகிழ்ச்சி அடையக்கூடிய நல்ல தீர்ப்பு வர காத்திருக்கிறது. அந்த தீர்ப்பின் மூலமாக தமிழகம் மகிழ்ச்சி அடையும். அதற்கு காத்திருங்கள். தயாராக இருங்கள்.இவ்வாறு அவர் பேசினார்.

Leave a comment