நீதி விசாரணையின்போது ஜெயலலிதா மரணம் பற்றிய வீடியோ வெளியிடப்படும்: புகழேந்தி

308 0

பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் நீதிபதி விசாரணையின் போது ஜெயலலிதா மரணம் பற்றிய வீடியோ கிளிப் பிங் வெளியிடப்படும் என்று புகழேந்தி கூறினார்.

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்த நாள் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்தில்கர்நாடக மாநில செயலாளர் புகழேந்தி பேசியதாவது:-

தமிழக அரசு செயல் இழந்து விட்டது. தமிழக அரசு ஜெயலலிதாவின் மரணம் குறித்து அமைக்கப்பட்டுள்ள விசாரணை கமி‌ஷன் சுதந்திரமாக செயல்பட வேண்டும். அப்படி விசாரணை நடந்தால்தான் ஜெயலலிதாவின் மரணம் குறித்த தெளிவான தகவல் கிடைக்கும்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்தால் தான் நேர்மையான விசாரணை நடக்கும். அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லையென்றால் ஜெயலலிதா மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

தமிழக அரசின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்த பன்னீர் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆதரித்து வாக்களித்த எங்கள் எம்.எல்.ஏ.க்கள் மீது நட வடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இது ஜெயலலிதாவுக்கு செய்த துரோகம்.
இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் நெல்லையில் புகழேந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் நடந்த சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் முதல்வர் பழனிசாமி கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது. அவரது மணிமண்டபத்தை திறப்பதை விட அவருக்கு அப்படி என்னவேலை. மணி மண்டபத்தை திறக்க சென்றால் அவரது பதவி போய் விடும் என யாரோ அவரிடம் தெரிவித்துள்ளார்.

அதனால் தான் அவர் அங்கு செல்லவில்லை. கங்கை, காவிரி இணைப்பு போன்று தான் ஓ.பி.எஸ். இ.பி.எஸ். இணைப்பு. அவர்களிடம் நட்பு கிடையாது. எங்களது அணியை சேர்ந்த 18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்தது கண்டனத்திற்குரியது.

சிவாஜி சிலை திறப்பு விழாவில் ஜெயக்குமார் பாட்டு பாடியிருப்பது, அவரது தவளை நடையின் தமிழ் பேச்சை காட்டியிருக்கிறது. அந்த பாடலை பாடுவதற்கு ஜெயக்குமாருக்கு எந்த அருகதையும் இல்லை.

ஜெயலலிதா மரணம் தொடர்பான வீடியோ கிளிப் பிங் வெளியிடப்படும் என தினகரன் கூறியுள்ளார்.பொதுச்செயலாளர் சசிகலாவின் ஒப்புதலுடன் நீதிபதி விசாரணையின் போது அந்த வீடியோ கிளிப் பிங் வெளியிடப்படும். எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a comment