சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர், அரம்பேபொல ரத்னசார தேரர் ஆகியோரை இன்று தெமட்டகொடையில் உள்ள கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவில் (சி.சி.டி.) ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று காலை அவர்களை இவ்வாறு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், கல்கிசையில் கடந்த செப்டம்பர் 26 ஆம் திகதி ரோஹிங்யா முஸ்லிம்கள் மீதான அத்து மீறல் தொடர்பிலான விசாரணைகளுக்காக அவர்கள் இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர கேசரிக்கு தெரிவித்தார்.
கல்கிசை பொலிஸ் பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் , மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்யா முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் செய்த அத்து மீறல்கள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய குற்றத் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சர் நிசாந்த டி சொய்ஸாவின் நேரடி கட்டுப்பாட்டில் உதவி பொலிஸ் அத்தியட்சர் சந்திரதிலக, பிரதான பொலிஸ் பரிசோதகரும் அந்த பிரிவின் பொறுப்பதிகாரியுமான நெவில் டி சில்வாவின் கீழ் மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன
அவர்களின் அறிவுறுத்தல் பிரகாரமே விசாரணையின் அவசியம் கருதி இன்று ஆஜராகுமாறு இந்த அழைப்பானது இரு தேரர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளது.