எரிபொருட்களின் விலையினை அதிகரிப்பது தொடர்பாக இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என்று பெற்றோலியம் மற்றும் பெற்றோலிய வளத் துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சின் செயலா ளர் உபாலி மாரசிங்க விடுத்துள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பெற்றோல் மற்றும் டீசல் விலை அதிகரிப்பது தொடர்பாக எந்த தீர்மானத்தையும் அமைச்சு இதுவரை மேற்கொள்ளவில்லை. அத்துடன் லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் எரிபொருட்களின் விலை அதிகரிப்பது தொடர்பாக எந்த கோரிக்கையையும் முன்வைக்கவில்லை. ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு சமமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனமும் நட்டமடைகின்றது.
மேலும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தற்போது பெற்றோல் லீட்டர் ஒன்றின் மூலம்16 ரூபாவும் டீசல் லீட்டர் ஒன்றின் மூலம் 06ரூபாவும் நட்டமடைந்து வருகின்றது. அத்துடன் இலங்கை மின்சாரசபை மற்றும் தனியார் மின் சக்தி நிறுவனங்கள் பெற்றுக்கொண்ட எரிபொருட்களுக்கு செலுத்தவேண்டிய தொகையை செலுத்தாமல் வழிவிட்டு வருகின்ற காரணமாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் பாரிய நிதித் தட்டுப்பாட்டு பிரச்சினைக்கு முகம்கொடுத்து வருகின்றது.
மேலும் கடந்த சில வருடங்களாக உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை பல சந்தர்ப்பங்களில் கூடி, குறைவடைந்துள்ளது. 2015 ஜனவரி மாதத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்று அமெரிக்க டொலர் 50.23 ஆக இருந்ததுடன் 2016 ஜனவரி மாதம் ஆகும் போது அது அமெரிக்க டொலர் 29.49 வரை குறைவடைந்தது.
அதேபோன்று 2016 டிசம்பர் மாதத்தில் உலக சந்தையில் மசகு எண்ணெய் பெரல் ஒன்றின் விலை அமெரிக்க டொலர் 54.63 ஆக இருந்ததுடன் 2017 செப்டம்பர் ஆகும்போது அது அமெரிக்க டொலர் 51.49ஆக குறைவடைந்தது.