சிரியாவில் இடம்பெற்றுவரும் உள்நாட்டு போர் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதத்தில் மாத்திரம் 3 ஆயிரத்து 300க்கும் அதிகமான பேர் மரணமடைந்துள்ளனர்.
சிரியாவில் இயங்கும் மனிதாபிமான மீட்புக் குழுக்களின் தரவுகளை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
மரணித்தவர்களில் 995 பேர் சாதாரண பொதுமக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஷ்ய சிரிய கூட்டுப்படைகளின் தாக்குதல்கள் காரணமாகவே 70 சதவீதமானவர்கள் மரணித்தாக தெரிவிக்கப்படுகின்றது.
மரணித்த பொதுமக்களில் 207 பேர் சிறார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன் 790 அரச படைகளும் 700க்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் மற்றும் அல்கொய்தா தீவிரவாதிகளும் 550 க்கும் மேற்பட்ட ஏனைய ஆயுத குழுவினரும் மரணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல் அசாத்துக்கு எதிரான ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஜிஹாதி குழுவினர் சிரயாவின் பல பகுதிகளை கையகப்படுத்தி, தங்களது ஆதிக்கத்தின்கீழ் கொண்டுவந்துள்ளனர்.
இதுதவிர, ஐ.எஸ். தீவிரவாதிகளும் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.
இந்த ஆயுதக் குழுக்களுக்கு எதிராக ரஷ்யாவின் விமானப்படையின் உதவியுடன் சிரிய அரச தரப்பு படைகள் தாக்குதல்களை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.