வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் உள்ள 5 கிராம சேவர் பிரிவில் 800 ஏக்கர் விடுவிக்க இணக்கம்

338 0

IMG_6557வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மேலும் 800 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் விடுவிப்பதற்கு இனங்காணப்பட்ட பகுதிகளில் 460 எக்கர் காணிகள் மட்டுமே மக்கள் மீள்குடியேறிக் கொள்ளக் கூடிய குடியிருப்புக் காணிகள் என்றும், ஏனையவை காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையும் அதனை அண்மித்த பகுதிகள் மற்றும் படைமுகாங்கள் அமைந்துள்ள பகுதிகளே என்றும் யாழ்.மாவட்டச் செயலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வலி.வடக்கு மீள்குடியேற்றத்தினை பூரணப்படுத்துவதற்காக 6 மாதம் கால அவகாசத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரியிருந்தார். இருந்த போதும் அந்த 6 மாத காலப்பகுதிக்குள் வலி.வடக்கின் மீள்குடியேற்றத்தில் முன்னெற்றங்கள் ஏற்படவில்லை.
இந்நிலையில் ஏமாற்றமடைந்த மக்கள் தொடர் போராட்டங்களுக்கு தயாராகிவந்த நிலையில் மீள்குடியேற்ற அமைச்சினால் முதற்கட்டமாக ஆயிரத்து 500 ஏக்கர் காணிகள் வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஒரு தொகுதி காணிகள் இவ்வருட ஆரம்பத்தில் விடுவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக இறுதியாக காங்கேசன்துறை, கட்டுவன், குரும்பசிட்டிப் பகுதிகளை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் காணிகள் மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டிருந்தன.
இதன் தொடர்ச்சியாக உயர்பாதுகாப்பு வலையத்திற்குள் இருந்து 800 ஏக்கர் காணிகள் விடுவிப்பதற்கு இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக காங்கேசன்துறை கிழக்கு துஃ233, காங்கேசன்துறi மத்தி துஃ234, காங்கேசன்துறை மேற்கு துஃ235, பளை வீமன்காமம் துஃ236, தையிட்டி துஃ250 போன்ற கிராம சேவையாளர் பிரிவுகளில் உள்ள காணிகளே இதன் போது விடுவிப்பதற்கான இனங்காணப்பட்டுள்ளது.
இவ்வாறு விடுவிப்பதற்கு இணக்கம் காணப்பட்ட பகுதிகளில் மக்கள் மீள்குடியேற்றப்படுவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் தற்போது யாழ்.மாவட்டச் செயலகத்தினால் ஆராய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
விடுவிப்பதாற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரும் பகுதிகளில் சுமார் 200 ஏக்கர் காணிகள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்காலை மற்றும் அதற்குரிய காணிகளாக உள்ளன.
மேலும் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவத்தினரினதும், கடற்படையினருடையதும் பாரிய படைமுகாங்களும் ஏராளமான மக்களுயைட குடிமனைக் காணிகளை ஆக்கிரமித்துள்ளன.
இந்நிலையில் குறித்த மீள்குடியேற்றம் தொடர்பாக நடைபெற்றுவரும் முதற்கட்ட ஆராய்வுகளின்படி விடுவிக்கப்படும் 800 ஏக்கரில் சுமார் 460 ஏக்கர் காணியே மக்களுடைய மீள்குடியேற்றத்திற்குப் பயன்படுத்தப்படக் கூடிய குடிமனைக் காணிகளாகும்.
அப் பகுதிகளில் உள்ள படைமுகாங்கள் அகற்றப்பட்டால் மேலும் சில மக்களுடைய குடியிருப்புக் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான சந்தர்ப்பங்களும் உள்ளன. இருப்பினும் படைமுகாங்களை அகற்றுவதற்கு பெரும் தொகை பணம் தேவைப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அங்குள்ள படைமுகாங்கள் அகற்றப்பட்டு மக்களுடைய குடியிருப்புக் காணிகள் விடுவிக்கப்படுவதற்கான உடனடியாக வாய்ப்புக்கள் குறைவு. மேலும் மீள்குடியேற்றத்திற்கென இனங்காணப்பட்ட பகுதிகள் அடுத்த வாரம் அளவில் விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும் குறித்த காணிகள் விடுவிப்புக்கான உத்தியோக பூர்வமான அறிவித்தல்கள் இதுவரையில் வெளியிடப்படவில்லை என்றும் அத்தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.