“முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனுக்கு, மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது” என, உலமா கட்சி தெரிவித்துள்ளது.
இது குறித்து, அக்கட்சி, நேற்று (30) வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
”றோகிஞ்சா முஸ்லிம்கள், முஸ்லிம் அமைச்சர்களால் இலங்கைக்கு அழைத்து வரப்படவில்லை. அவ்வாறு அழைத்து வரக்கூடிய அறிவோ, பலமோ, அமைச்சர்களிடம் இல்லை. றோகிஞ்சா முஸ்லிம்கள், வெளிநாடு ஒன்றுக்குப் போகும்போது, வழிதவறி, இங்கு கரை ஒதுங்கியவர்கள் என்று நன்கு தெரிந்தும், முஸ்லிம்களின் விகிதாசாரத்தை அதிகரிப்பதற்காகவே இங்கு அழைத்து வரப்படுகிறார்கள் என பிரபா கணேசன் கூறியிருக்கின்றமை, சிறுபிள்ளைத்தனமான கருத்தாகும்.
“இந்தியாவில் இருந்து இலங்கையின் எல்லைக்குள் வழிதவறி வந்து மீன் பிடிக்கும் தமிழர்களை, இலங்கை அரசாங்கம் சிறைப்பிடித்து இலங்கை சிறையில் வைத்தே, அவர்களைப் போஷிக்கிறது. இவ்வாறு செய்வது, இங்கு தமிழ் மக்கள் பரம்பலுக்காக தமிழ் அரசியல்வாதிகளின் பின்னணியில் இவ்வாறு நடக்கிறது என, புத்தியுள்ள எவரும் சொல்லமாட்டார்கள். அவ்வாறுதான் பிரபா கணேசனின் கருத்து உள்ளது.
“ஏற்கெனவே, அகதிகளாக இலங்கைக்கு வந்த றோகிஞ்சா முஸ்லிம்கள் அனைவரும், வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுவிட்டார்கள் என அரசாங்கம் தெளிவாக அறிவித்திருப்பது, பிரபா கணேசனுக்கு தெரியாதா எனக் கேட்கிறோம்.
“இலங்கை தமிழ் மக்கள் இலட்சக்கணக்கானோர், ஐரோப்பாவிலும் இந்தியாவிலும் அகதிகளாகத் தஞ்சமடைந்த போது, அந்நாடுகள் அவர்களுக்கு உணவும் உறையும் சம்பளமும் வழங்கி, தமது மனிதாபிமானத்தை காட்டின. அதேபோல், கல்முனை மீனவர்கள் வழிதவறி மாலைதீவுகளின் கடல் எல்லைக்குச் சென்ற போது, மாலைதீவுகள் அரசாங்கம், இலங்கை மீனவர்களை மாதக்கணத்தில் போஷித்து, பின்னர் இலங்கைக்கு அனுப்பியதெல்லாம் பிரபா கணேசனுக்கு தெரியாது என்றால், இவருக்கு மனிதாபிமானம் என்றால் என்னவென்றே தெரியாது என்றே தெரிகிறது.
“இலங்கையில் தஞ்சமடைந்த, மியான்மார் இராணுவத்தால் அனைத்தையும் இழந்த பரிதாபத்துக்குரிய மக்கள், இங்கு தற்காலிகமாக தங்கியிருப்பதை, பெரும்பான்மையின இனவாதிகள் பார்ப்பது போன்று பிரபா கணேசனும் பார்ப்பது, அவரது முஸ்லிம் விரோத இனவாத முகத்தைக் காட்டியுள்ளது. இலங்கை முஸ்லிம்கள், தமது தொகையை அதிகரிக்க வேண்டுமாயின், தமிழ் நாட்டு முஸ்லிம்கள் இங்கு வந்தாலே போதும். அதைக்கூட இலங்கை முஸ்லிம்கள் விரும்பாமல், நாட்டின் இறைமையைப் பாதுகாப்பதில் அக்கறையுடன் உள்ளார்கள் என்பதை, பிரபா கணேசன் போன்றோர் புரிந்து கொள்ள வேண்டும்” எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.