உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு த.மா.கா. தொண்டர்கள் பாடுபட வேண்டும் என ஜி.கே.வாசன் பேசினார். திருவாரூர் கீழவீதியில் மாவட்ட த.மா.கா. சார்பில் ஜி.கே.மூப்பனாரின் 85-வது பிறந்த நாள் விழா மற்றும் விவசாயிகள் தின விழா பொதுக்கூட்டம் நடந்தது. விழாவிற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.ஆர்.மூப்பனார் தலைமை தாங்கினார். தஞ்சை மாவட்ட தலைவர்கள் ரெங்கராஜன் (தெற்கு), ஜிர்ஜிஸ் (வடக்கு), நாகை மாவட்ட தலைவர்கள் நாராயணசாமி (தெற்கு), சங்கர் (வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக திருவாரூர் மாவட்ட தலைவர் குடவாசல் தினகரன் வரவேற்றார்.
விழாவில் மாநில தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு கடந்த 2 மாதங்களாக தலைவர் இல்லாமல் இருந்து வருகிறது. இதனை மகிழ்ச்சியாக கூறவில்லை. வேதனையுடன் கூறுகிறேன். தமிழகத்திலேயே காங்கிரஸ் என்றால் அது தமிழ் மாநில காங்கிரசாக இருந்து வருகிறது.
த.மா.கா.வை கேலி செய்தவர்கள் பதவியை இழந்து நிற்கின்றனர். நாங்கள் வெற்றி பெற்றபோது மமதை கொண்டதும் இல்லை. தோல்வியை சந்தித்த போது துவண்டு விடவும் இல்லை. தோல்வியை, வெற்றிகளாக மாற்றக்கூடிய தொண்டர்கள் த.மா.கா.வில் தான் உள்ளார்கள்.
த.மா.கா. உயிரோட்டமிக்க இயக்கமாகவும், நாளைய தமிழகத்தை ஆளப்போகிற இயக்கமாகவும் இருந்து வருகிறது. வருகிற உள்ளாட்சி தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அதற்காக கட்சி தொண்டர்கள் அனைவரும் பாடுபட வேண்டும். கூட்டணி என்று பார்க்காமல் தனிப்பட்ட முறையில் த.மா.கா.வை பலப்படுத்திட வேண்டும்.
காவிரியின் குறுக்கே புதிய அணை கட்டுவதாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். இதனை விவசாயிகளுடன் ஒன்றிணைந்து த.மா.கா. வன்மையாக கண்டிக்கிறது. எனவே கர்நாடகம், தமிழகத்தில் உள்ள அணைகளை ஆய்வு செய்ய மத்திய அரசு குழு அமைக்க வேண்டும்.
நடுவர் மன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் மற்றும் ஷேல் கியாஸ் எடுக்கும் திட்டத்தை முற்றிலும் மத்திய அரசு கைவிட வேண்டும்.
சிறு, குறு விவசாயிகள் பாகுபாடியின்றி அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி வேண்டும். இந்த நிலையில் சட்டசபையில் வருகிற 22-ந் தேதி போலீஸ் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறுகிறது.
சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பேசக்கூடாது என்பதற்காக சபாநாயகர் இடைநீக்கம் என்ற நிலையை எடுத்துள்ளார். தமிழகத்தில் எதிர்க்கட்சி தலைவருக்கு பின்னால் அதிக சட்டமன்ற உறுப்பினர்களை தமிழக மக்கள் கொடுத்துள்ளனர். ஆனால் மக்கள் பிரச்சினை பற்றி பேச எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு அளிக்கவில்லை. இது ஜனநாயகத்தின் கேலி கூத்தாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் சுரேஷ்மூப்பனார், சந்திரசேகரமூப்பனார், சுதாகர்மூப்பனார், மாநில துணைத்தலைவர்கள் ஆறுமுகம், கோவை.தங்கம், மாநில பொதுச்செயலாளர் சக்திவடிவேல், மாநில விவசாய அணி தலைவர் நாகராஜன், மாநில கொள்கை பரப்பு செயலாளர் கரிகாலன், மாநில செயலாளர் செந்தில்பாண்டியன், நகர தலைவர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர தலைவர் கார்த்திகேயன் நன்றி கூறினார்.