கிளிநொச்சி – சுண்டிக்குளம் பிரதேசத்திலுள்ள காணி ஒன்றில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக வெளியான தகவலை அடுத்து பொலிஸாரும், இராணுவத்தினரும் அங்கு குவிக்கப்பட்டு தேடுதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. இரகசிய பொலிஸாரிடம் இருந்து நேற்று இரவு கிடைக்கப்பெற்ற தகவலை தொடர்ந்து 10 இராணுவச் சிப்பாய்கள், 40 பொலிஸார் உட்பட இரகசிய பொலிஸ் அதிகாரிகள் சிலரும் இன்றுகாலை அங்கு குவிக்கப்பட்டனர்.
மக்கள் பயன்பாடு அற்ற அந்தக் காணியில் பெருமளவு ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த காணியைச் சுற்றி பொலிஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்று மாலை வேளையில் குறித்த காணியில் சந்தேகத்திற்கிடமான பகுதிகளில் இயந்திரம் மூலம் தோண்டும் பணிகள் இடம்பெற்றன.