மோரிட்டானியா நாட்டில் வன்முறையை தூண்டியதாக அடிமை எதிர்ப்பு ஆர்வலர்கள் 13 பேர் மீது குற்றம் சாட்டி, கைது செய்யப்பட்டனர்.ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று மோரிட்டானியா. அங்கு பரம்பரை அடிமைத்தன்மைக்கு எதிராக ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு இயங்கி வருகிறது.
இந்த நிலையில், அங்கு ஒரு குடிசைப்பகுதியில் ஹராட்டின் என்ற பெயரில் அழைக்கப்படுகிற கருப்பின அடிமைத்தோன்றல்கள் வசித்து வந்தனர். அரபு லீக் மாநாடு ஒன்று நடத்துவதற்காக அந்த மக்களை கட்டாயப்படுத்தி இடமாற்றம் செய்துள்ளனர்.
இதற்கு எதிராக பரம்பரை அடிமைத்தன எதிர்ப்பு ஆர்வலர்கள் கடந்த ஜூன் மாதம் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அதைத் தொடர்ந்து வன்முறையை தூண்டியதாக அடிமை எதிர்ப்பு ஆர்வலர்கள் 13 பேர் மீது குற்றம் சாட்டி, கைது செய்தனர்.
அவர்கள் மீது நவாக்சோட் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இது பொய் வழக்கு என சர்வதேச மன்னிப்பு சபை கருத்து கூறியது.
இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் என நீதிபதி கண்டு, அவர்களுக்கு தலா 3 ஆண்டு முதல் 15 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார்.
இந்த தீர்ப்பு, நீதியின் போலித்தனம் என விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளது.