அம்பேவெல தேசிய பால் உற்பத்தி நிறுவனத்தில் இருந்து வெளியேறும் மேலதிக பாலும், கழிவுகளும் அம்பேவெல ஓயாவில் கலப்பதனால் அதனை அண்டிய பகுதிகளில் வாழும் பயனாளிகள் மற்றும் வெலிமடை பிரதேச மக்கள் பாதிக்கப்படுவதாக கூறி ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
அம்பேவெல மில்கோ நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் குறித்த ஆற்றில் கலப்பதனால் ஆற்று நீரை பயன்படுத்தும் இரண்டாயிரத்துக்கும் அதிகமான விவசாய குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டககாரர்கள் தெரிவிக்கின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு கொடிகளையும், “இலாபம் உமக்கு சோகம் எமக்கு” ,“நாட்டிற்கு போசனையான பால், எமக்கு கழிவு பால்”, “அரசே விவசாயிகள் வைற்றில் அடிக்காதே”, “நாட்டின் அபிவிருத்திக்கு நாம் தடையில்லை, ஆனால் எமது விவசாயத்திற்கு தலை போடாதே” போன்ற சுலோகங்கள் எழுதிய பதாகைகளையும் ஏந்தியிருந்தனர்.
குறித்த விடயத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் அம்பேவெல மில்கோ நிறுவனத்தை முற்றுகையிட்டு சுமார் 4 மணித்தியாலங்கள் வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.