அரசின் துரோகத்தற்கு துணைபோகிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு

7829 0

அரசாங்கம் இழைத்து வரும் துரோகத்திற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு துணை போவதாக முன்னாள் அமைச்சரும், லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றஞ்சாட்டியுள்ளார். 

யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியாளர் சந்திப்பின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த திஸ்ஸ விதாரண, அரசாங்கம் செய்து வருகின்ற துரோகச் செயல்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி ஆகியன துணை போகின்றன.

எங்களது பொருளாதாரத்தை வெளிநாடுகள் கையில் எடுப்பதற்கும், சுதந்திரத்தை சீர்குலைப்பதற்கும் அவர்கள் துணை போகிறார்கள்.

எதிர்க் கட்சி என்று சொல்லிக் கொண்டிருக்கும் சம்பந்தன் உள்ளிட்ட கூட்டமைப்பு உறுப்பினர்கள் இதற்குத் துணை போகிறார்கள்.

இவ்வாறானதொரு எதிர்கட்சி வேறொரு நாட்டிலும் இல்லை.

நாட்டு மக்களுக்கு இந்த அரசு இன்று வேண்டாம் என்று ஆகிவிட்டது.

சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வந்தபோது சிங்களம், தமிழ் இரண்டும் அரச மொழிகளாக இருக்க வேண்டும் என்று குரல் கொடுத்தது எமது கட்சி.

இலங்கையில் யுத்த மீறல்கள் இடம்பெற்றிருந்தால் எமது நாட்டுக்குள் எமது நீதிமன்றமே நேரடியாகப் பார்த்து குற்றம் இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கவேண்டும்.

அதுவே சர்வதேச நீதியாகும். அதனைச் செய்யாமல் ஐ.நாவில் சென்று ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுவிட்டு வந்திருக்கிறார்கள். எம்மை நோக்கி குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை ஆகியன கை நீட்ட இடமளித்திருக்கிறது. இந்த அரசு இதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் துணை போகிறது என்று அவர் தெரிவித்தார்.

Leave a comment