அமெரிக்க வாக்காளர் பட்டியலில் பெண்கள் பிரிவில் அதிபர் டொனால்டு டிரம்ப் மருமகன் பெயர் இடம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரட் குஷ்னர் (32). டொனால்டு டிரம்பின் மருமகன் ஆன இவர் அவரது ஆலோசகராகவும் பதவி வகிக்கிறார்.
செல்வந்தரான இவர் கோடீசுவரர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்காவை திருமணம் செய்த பின் மிகப் பெரிய அளவில் பிரபலமானார். நியூயார்க் வாக்காளர் பட்டியலில் இவரது பெயர் பெண்கள் பிரிவில் இடம் பெற்றுள்ளது. இது 8 ஆண்டுகளாக தொடர்கிறது.
அதற்கான ஆவணங்கள் அமெரிக்க பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது முதல் முறையல்ல என்ற தகவலும் வெளியாகி உள்ளது. 2009-ம் ஆண்டு நியூஜெர்சியில் அவர் பெயர் எந்த பிரிவிலும் இடம் பெறாமல் அடையாளம் தெரியாதவர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது.
இது தவிர குஷ்னர் மீது பல்வேறு புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியா தலையீடு இருந்த விவகாரத்தில் இவரது பெயரும் இடம் பெற்றுள்ளது. அரசு விவகாரங்களுக்கு பிரைவேட் இ-மெயில்களை பயன்படுத்தியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.